2016-10-20 16:20:00

தெற்கு சூடானில் "நல்லாயன் அமைதி மையம்"


அக்.20,2016. உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடான் நாட்டின், ஜூபா மறைமாவட்டத்தில், "நல்லாயன் அமைதி மையம்" என்ற பெயரில் ஓர்  இல்லம், அண்மையில் திறக்கப்பட்டது என்று பீதேஸ் (Fides) செய்தி  கூறுகிறது.

இருபால் துறவு சபைகளைச் சார்ந்த சிலர் ஒருங்கிணைந்து ஆரம்பித்துள்ள இந்த இல்லத்தின் திறப்பு விழாவில், தெற்கு சூடான் திருப்பீடத் தூதர், பேராயர் சார்ல்ஸ் டேனியல் பால்வோ, ஜூபா பேராயர் பாவொலினோ லுடுக்கு லோரோ மற்றும் ஏனைய ஆயர்கள், துறவியர் மற்றும் பொது நிலையினர் கலந்துகொண்டனர்.

தெற்கு சூடான் மக்களுக்கு, குறிப்பாக, இளையோருக்கு அமைதி வழிகளை கற்றுக்கொடுக்கும் முயற்சியாக கருத்தரங்குகள் இம்மையத்தில் நடத்தப்படும் என்றும், அமைதி, நீதி, ஒப்புரவு ஆகியவற்றில் கத்தோலிக்கத் திருஅவை காட்டிவரும் ஆர்வத்திற்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு என்றும், தெற்கு சூடான் துறவியர் அவையின் தலைவர், அருள்பணி டேனியல் மோஸ்கெட்டி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.