2016-10-20 16:11:00

திருவழிபாட்டுப் பாடகர்களின் சிறப்பு யூபிலி கொண்டாட்டம்


அக்.20,2016. அக்டோபர் 21,22,23 ஆகிய மூன்று நாட்கள், வத்திக்கானில், திருவழிபாட்டுப் பாடகர்களுக்கும், அவர்களை வழிநடத்துவோருக்கும், திருவழிபாட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சிறப்பு யூபிலி கொண்டாட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் பல்வேறு மறைமாவட்டங்களிலிருந்தும், இன்னும் சில நாடுகளிலிருந்தும் வருகை தரும் 10,000த்திற்கும் மேற்பட்ட பாடகர்களின் யூபிலி கொண்டாட்டங்கள், அக்டோபர் 21, வெள்ளியன்று, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெறும் பாடல் பயிற்சியுடன் துவங்கும்.

அக்டோபர் 22, சனிக்கிழமை கொண்டாடப்படும் புனித 2ம் ஜான்பால் திருநாளன்று, பாடகர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்திப்பதும், அவ்வேளையில் நடைபெறும் இசைக் கச்சேரியும் இந்த யூபிலியின் சிறப்பு நிகழ்ச்சிகளாகும்.

"இரக்கத்தைப் பாடுதல்" என்ற தலைப்பில், நடைபெறும் ஒரு கருத்தரங்கில், பல்வேறு இசைக்கலைஞர்களும், வழிபாட்டு ஒருங்கிணைப்பாளர்களும் உரையாற்றுவதோடு, பாடகர்களில் பலர், தங்கள் வாழ்வில் இசையால் உருவான மாற்றங்கள் குறித்து சாட்சியங்களையும் பகிர்ந்துகொள்வர்.

அக்டோபர் 23, ஞாயிறன்று, யூபிலியைக் கொண்டாடும் பாடகர்களும், ஒருங்கிணைப்பாளர்களும் புனித பேதுரு பசிலிக்காவின் புனித கதவு வழியே நுழைந்து, பசிலிக்கா பேராலயத்தில், பேராயர் ரீனோ பிசிக்கெல்லா (Rino Fisichella) அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலியில் பங்கேற்பர்.

திருப்பலியில் இறுதியில், புனித பேதுரு வளாகத்தில் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை, பாடகர்களை சிறப்பாக வாழ்த்தி வழியனுப்பி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.