2016-10-20 16:11:00

திருத்தந்தை: சமுதாய நலனின் அளவுகோல், குழந்தைகளே


அக்.20,2016. குடும்பம், சமுதாயம், உலகம் என்ற அனைத்து நிலைகளிலும் நாம் எவ்வளவு நலமாக உள்ளோம் என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல், அங்கு வாழும் குழந்தைகளே, அவர்களே நமது நம்பிக்கை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் தலத்திருஅவைக்கு அனுப்பிய ஒரு மடலில் கூறியுள்ளார்.

1717ம் ஆண்டு, பிரேசில் நாட்டில் அபரெசிதா (Aparecida) அன்னை மரியாவின் அற்புத உருவம் கண்டுபிடிக்கப்பட்டதன் 300ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களையொட்டி, அந்நாட்டில் சிறப்பிக்கப்பட்ட குழந்தைகள் வாரத்திற்கென திருத்தந்தை அனுப்பிய வாழ்த்து மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.

அக்டோபர் 12 முதல், 19 முடிய நடைபெற்ற இந்த குழந்தைகள் வார கொண்டாட்டங்களையொட்டி, அபரெசிதா பேராயர், கர்தினால் Raymundo Damasceno Assis அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பிய மடலில், இவ்வாண்டு, செப்டம்பர் மாதம் 3ம் தேதி, வத்திக்கான் தோட்டத்தில், அபரெசிதா அன்னை மரியாவின் திரு உருவம் நிறுவப்பட்டதையும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைத் தொழில் என்ற கொடுமையை அகற்றி, அவர்களுக்கு தகுந்த கல்வியை அளிப்பதற்கு, பிரேசில் தலத்திருஅவை மேற்கொண்டு வரும் முயற்சிகளை, தன் மடலில் பாராட்டியத் திருத்தந்தை, குழந்தைகளை அன்புடன் வரவேற்று, அவர்களிடம் நம்பிக்கையை வளர்ப்பது நம் கடமை என்று வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைத் தொழில் என்ற கொடுமையை அகற்ற பிரேசில் திருஅவை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அபரெசிதா அன்னை மரியா துணை வருவார் என்ற ஆசியுடன், திருத்தந்தை அனுப்பிய இந்த மடல் நிறைவு பெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.