2016-10-20 14:27:00

இது இரக்கத்தின் காலம் : நேர்மையான செயலுக்கு எப்போதும் பலன்


ஒருசமயம், காஷ்மீரில் உள்ள Kupwara மாவட்ட பகுதியில், பதினைந்து இந்திய இராணுவ வீரர்கள், ஓர் அதிகாரி தலைமையில், இமாலயாவில், கடும் குளிரில், கஷ்டப்பட்டு ஏறிக்கொண்டிருந்தனர். மணிக்கணக்காய் நடந்துகொண்டிருந்ததால், களைப்படைந்த அவர்கள், அந்த வழியில், மூடப்பட்டிருந்த ஒரு சிறிய டீக் கடையைத் திறந்து, சூடாக, தேனீர் தயாரித்து குடித்தனர். அக்கடையில் இருந்த பிஸ்கட்டுகளையும் சாப்பிட்டனர். அவர்கள் புறப்படத் தயாரானபோது, அந்த அதிகாரி, “நாம் திருடர்கள் இல்லை. பாரத மாதாவின் பிள்ளைகள். இந்த நாட்டைக் காப்பாற்றும் புனிதப் பணியில் இருக்கின்ற நாம், இப்படிப் பூட்டிக் கிடக்கும் கடையை உடைத்து, இருந்ததை காலி பண்ணிவிட்டு, கொள்ளைக்காரர்கள் போன்று கிளம்பிப் போவது தர்மமில்லை! என்று சொல்லிவிட்டு, தனது பாக்கெட்டிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து, அங்கே மேஜையில், சர்க்கரை டப்பாவின் கீழே வைத்துவிட்டு, வெளியே வந்தார். கதவைப் பழையபடியே இழுத்து மூடிவிட்டு, எல்லாரும் கிளம்பினார்கள். மூன்று மாதம் முகாமில் தங்கி, பணிகளை முடித்துவிட்டு, அங்கிருந்து திரும்பும்போது, வழியில் மறுபடியும் அதே டீக்கடை. இப்போது அது திறந்திருந்தது. அக்கடையில் இருந்த வயதானவர், இவர்களைத் திடீரெனப் பார்த்ததில், பரபரப்பாகி, அவர்களை வரவேற்று, பிஸ்கட், டீ வழங்கினார். அப்போது, அந்த இராணுவ அதிகாரி, அந்தக் கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தார். அவரும், ‘கடவுள் புண்ணியத்துல எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு’ன்னார். “கடவுள்மேல் இவ்வளவு பக்தி வைத்திருக்கிறீர்கள். ஆனால், கடவுள் இருக்கிறது உண்மை என்றால், அவர் ஏன் உங்களை இப்படி ஒரு காட்டில், கஷ்டப்படும்படி வைத்திருக்க வேண்டும்?” என்று கேட்டார் அதிகாரி. உடனே அந்தப் பெரியவர் பதறிப்போய், “ஐயா! அப்படிச் சொல்லாதீங்க கடவுள் நிச்சயம் இருக்கார். இதுக்கு உதாரணமா ஒரு சம்பவம் சொல்றேன், மூணு மாசத்துக்கு முன்னால, தீவிரவாதிங்க சிலபேர் எதுக்காகவோ என் பையனைக் கடத்திக்கொண்டுபோய் வெச்சுக்கிட்டு, அடிச்சு உதைச்சிருக்காங்க. அப்புறம் கொண்டுவந்து இங்கே போட்டுட்டுப் போயிட்டாங்க. நான் பதறிப்போய், கடையை மூடிட்டு, என் பையனைக் கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனேன். டாக்டருங்க எழுதிக் கொடுத்த மருந்தை வாங்க, என்கிட்ட பணம் இல்லை. எனக்குக் கடன் கொடுக்கவும் யாரும் இல்லை. அப்போ எனக்கு இருந்த ஒரே துணை கடவுள்தான். அவர்கிட்டே என் நிலைமையைச் சொல்லிக் கதறி அழுதேன். பையனை ஆஸ்பத்திரில விட்டுட்டு, பணத்துக்கு என்ன பண்றதுங்கிற கவலையோட மறுபடியும் இங்கே வந்தேன். ஐயா, சொன்னா நம்ப மாட்டீங்க. என் பிரார்த்தனையைக் கேட்டுக் கடவுள் அன்னிக்கு என் கடைக்கு வந்திருந்தார். என் மேஜைமேல முழுசா ஆயிரம் ரூபா வெச்சுட்டுப் போயிருந்தார். அந்த ஆயிரம் ரூபாயோட மதிப்பை என்னால வார்த்தைல விவரிக்க முடியாதுங்க. அந்தப் பணத்தைக் கொண்டு என் பையனுக்கு சிகிச்சை அளிச்சு, இன்னிக்கு அவன் நல்லா இருக்கான். கடவுள் இருக்கார்; நிச்சயம் இருக்கார். அவ்வளவுதான் சொல்வேன்!” என்றார். பெரியவர் சொல்லி முடித்ததும், அதிகாரி எழுந்து பெரியவரை அன்போடு அணைத்துக்கொண்டார். , “எனக்குத் தெரியும் தாத்தா, நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. கடவுள் இருக்கார். சத்தியமா இருக்கார். உங்க கை மணத்தில் டீ அபாரமா இருந்தது. இந்தாங்கன்னு, அவர்கள் அப்போது சாப்பிட்டதற்கும் பணம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து சென்றனர். மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்ததை அவர்கள் பெரியவரிடம் சொல்லவில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.