2016-10-19 15:38:00

மியான்மாரில், மக்களாட்சி, மீண்டும் இராணுவ ஆட்சியாகக்கூடாது


அக்.19,2016. மியான்மார் நாட்டின் கச்சின் மற்றும் காரன் மாநிலங்களில் அண்மையில் துவங்கியுள்ள மோதல்கள் முடிவுக்கு வரவேண்டுமென்று அந்நாட்டு கர்தினால் சார்ல்ஸ் மாங் போ (Charles Maung Bo) அவர்கள் விண்ணப்பித்துள்ளார் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

பல ஆண்டுகளாக, இராணுவ ஆட்சியால் துன்புற்ற நாட்டில், அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள மக்களாட்சி, விரைவில் மீண்டும் இராணுவ ஆட்சியாக மாறக்கூடாது என்றும், கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு ஆயுதங்களின் உதவியைத் தேடுவதற்குப் பதில், உரையாடல் வழியைத் தேடலாம் என்றும், யாங்கூன் பேராயர், கர்தினால் போ அவர்கள் கூறியுள்ளார்.

நீதிக்காகப் போரிடுவதாக போராட்டக் குழுக்கள் கூறிவருவது குறித்து பேசிய கர்தினால் போ அவர்கள், போர் என்ற முயற்சியை, எந்த ஒரு காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்று தெளிவாக்கினார்.

மியான்மார் நாடு, மத உணர்வுகளில் ஊறிப்போயிருக்கும் ஒரு சமுதாயம் என்பதால், தற்போது நிகழ்ந்துவரும் மோதல்களைத் தீர்ப்பதற்கு, புத்த, கத்தோலிக்க, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கர்தினால் போ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.