2016-10-19 14:56:00

மறைக்கல்வியுரை : செயல்வடிவம் பெறாத நம்பிக்கை, உயிரற்றது


அக்.,19,2016. இவ்வாரத் துவக்கத்தின் இரண்டு நாட்களிலும் அவ்வப்போது மழைபெய்து கொண்டிருக்க, இப்புதனும் அத்தகைய நிலை ஏற்படுமோ என அஞ்சிக்கொண்டிருந்த வேளையில், குளிரும் இல்லாமல் வெப்பமும் இல்லாமல் ஓர் இதமான தட்ப வெப்ப நிலையுடன் புதன் விடிந்தது. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் பெருமெண்ணிக்கையில் திருப்பயணிகளும் சுற்றுலாப்பயணிகளும் குழுமியிருக்க, புனித யாகப்பர் எழுதிய திருமுகத்தின் இரண்டாம் பிரிவு,  14 முதல் 17 வரையுள்ள  சொற்றொடர்களை மையமாக வைத்து, 'பசியாயிருப்போருக்கு உணவளிப்பதுடன், தாகமாயிருப்போரின் தாகத்தையும் தணியுங்கள்'  என்ற தலைப்பில் மறைக்கல்வி உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புச் சகோதர சகோதரிகளே, இயேசுவைப் பின்பற்றுபவர்களாகிய நாம், 'தந்தையைப்போல் இரக்கமுள்ளவராக' இருப்பதற்குரிய நம் பொறுப்புணர்வுகளையும், இறை இரக்கத்தையும் குறித்து, இந்த சிறப்பு யூபிலி ஆண்டின் மறைக்கல்வி உரைகளில் ஆழமாக சிந்தித்து வந்துள்ளோம். இரக்க நடவடிக்கைகளில் முக்கியமானது, பசியாயிருப்போருக்கு உணவளிப்பதாகும். உணவும் தண்ணீரும் கிடைக்க வேண்டியது மனிதரின் அடிப்படை உரிமை. இருப்பினும், இன்றைய உலகில் எண்ணற்ற மனிதகுல குடும்பத்தினர், குறிப்பாக, குழந்தைகள், பசியாலும் தாகத்தாலும் தொடர்ந்து தவித்து வருகின்றனர். உலக அளவில் பெரும் துன்பகரமான நிகழ்வுகள் ஏற்படும்போது மக்கள் வெளிப்படுத்தும் தாராள மனப்பான்மை மற்றும் ஒருமைப்பாட்டுணர்வுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கும் அதேவேளை, நம் வாழ்வில் மக்களின் தேவைகளை நாம் காணும்போது, அதற்கு இயைந்த வகையில் இரக்கச் செயல்பாடுகளை தனிப்பட்ட முறையில் நாம் ஏற்று நடத்தவேண்டும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

நம் சகோதர சகோதரிகளின் நடைமுறைத் தேவைகளுக்குப் பாராமுகமாக இருப்பதற்கு எதிராக நம்மை எச்சரிக்கிறார் புனித யாகப்பர். ஏனெனில், 'நம்பிக்கை, செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்' என்கிறார் அவர்(யாக. 2:14-17).  அப்பத்தையும் மீனையும் பலுகச் செய்த புதுமையில், பெருந்திரளான மக்கள் கூட்டத்திற்கு உணவளிக்கச் சொன்ன இயேசு, மக்கள் கூட்டத்திடம் இருக்கும் உணவைப் பகிரச் செய்து அதனை பலுகச் செய்கிறார். இயேசுவே வாழ்வு தரும் உணவு.  அதேவேளை, நாம் நம் சகோதர சகோதரிகளின் பசி, தாகத்திற்கு எம்முறையில் பதிலளிக்கிறோமோ அதைச் சார்ந்தே, இறைத்தந்தையுடனான நம் உறவு இருக்கும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லித் தருகிறார்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.