2016-10-19 15:16:00

செய்தியாளர்களைச் சந்தித்த இயேசு சபையின் புதிய உலகத் தலைவர்


அக்.19,2016. விசுவாசத்திற்குப் பணியாற்றவும், நீதியை வளர்க்கவும் இயேசு சபையினர் ஆற்றிவந்த பணிகளில், எவ்வித மாற்றத்தையோ, தொய்வையோ, இந்தப் பொதுப்பேரவை உருவாக்காது என்று இயேசு சபையின் புதிய உலகத் தலைவர், அருள்பணி அர்த்தூரோ சோசா அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

அக்டோபர் 14, கடந்த வெள்ளியன்று, இயேசு சபையினரின் உலகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அருள்பணி சோசா அவர்கள், இச்செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு அளித்த முதல் நேர்காணலில், இன்றைய உலகின் சவாலைகளை, இயேசு சபையினர் எவ்விதம் சந்திக்க விழைகின்றனர் என்பது குறித்துப் பேசினார்.

உரோம் நகரின் இயேசு சபை தலைமை இல்லத்தில் அமைந்துள்ள பொதுப் பேரவை அரங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், அருள்பணி சோசா அவர்களை, வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனர், இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், இயேசு சபை வரலாற்றில், ஐரோப்பியர் அல்லாத முதல் உலகத் தலைவர், அருள்பணி சோசா என்று, செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்தார்.

அருள்பணி சோசா அவர்கள் பிறந்து, வளர்ந்த நாடான வெனேசுவேலா பற்றி எழுந்த முதல் கேள்விக்குப் பதில் அளித்தபோது, தன் நாட்டில், குடியரசு, இன்னும் முழுமையாக நிலைநாட்டப்படுவதற்கு, உரையாடல் அதிகமாகத் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

'கறுப்புத் திருத்தந்தை' என்று அழைக்கப்படுவதை தான் விரும்பவில்லை என்று கூறிய அருள்பணி சோசா அவர்கள், திருத்தந்தையுடன் இயேசு சபையினருக்கு உள்ள தனிப்பட்ட உறவைக் குறித்தும் விளக்கினார்.

தனக்கு முன் உலகத் தலைவராக பணியாற்றிய அருள்பணி அடால்ஃபோ நிக்கோலஸ் அவர்கள், எவ்விதம் இப்பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் என்பதை செய்தியாளர்களிடம் கூறிய அருள்பணி சோசா அவர்கள், அவர் வகுத்துச் சென்ற பாதையில் இயேசு சபையை வழி நடத்துவது தன் பொறுப்பு என்பதையும் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : gc36.org / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.