2016-10-19 15:02:00

ஐரோப்பியக் கருத்தரங்கில், கர்தினால் டர்க்சன் வழங்கிய உரை


அக்.19,2016. "அன்புடன், ஒவ்வொரு நாளையும் கிறிஸ்தவ சாட்சியத்துடன் வாழ்வதே புனிதம்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியாக அமைந்தது.

மேலும், குறுகிய காலத்தில் இலாபம் திரட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பொருளாதாரம் மக்களைக் கொல்லும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளச் சொற்களை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐரோப்பிய நாடுகளின் கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

அக்டோபர் 19, இப்புதன் முதல், 21 வெள்ளி முடிய உரோம் நகரில், நுண்மை நிதித்திட்டத்தை (Microfinance) மையப்படுத்தி நடைபெறும் ஐரோப்பியக் கருத்தரங்கு ஒன்றில், திருப்பீட நீதி, அமைதி அவைத்தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இப்புதனன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

சிறு அளவில் கடனுதவிகள் செய்வது வறுமையைப் போக்கும் ஒரு சிறந்த வழி என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அவருக்கு முந்தைய திருத்தந்தையரும் உலகிற்கு எடுத்துக்கூறத் தவறியதில்லை என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன் அவர்கள், வறியோரின் நலனில் அக்கறை கொள்ளாமல், குறுகிய கால இலாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவது, பெரும் ஆபத்து என்பதை எடுத்துரைத்தார்.

பங்கு சந்தையின் எண்ணிக்கைகள், மக்களைவிட முக்கியத்துவம் பெற்று, தலைப்புச் செய்திகளாகும்போது, மனித உயிர்கள் தெருக்களில் வாழ்வதற்கும், குளிரில் இறப்பதற்கும் தள்ளப்படும் நிலை, செய்திகளாக இடம்பெறுவதில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Charlemagne விருதைப் பெற்றபோது கூறிய வார்த்தைகளையும், கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

மக்களை மையப்படுத்தி முதலீடு செய்வதால் வரும் பயன்களைக் குறித்து பேசிய கர்தினால் டர்க்சன் அவர்கள், மக்களை அடித்தளமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பொருளாதார முயற்சிகள், உலகமயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மைக்கு சக்தி வாய்ந்த ஒரு மாற்று மருந்தாக விளங்கும் என்று வலியுறுத்திக் கூறினார்.

வறியோர் மற்றும் வலுவற்றோருடன் தன்னையே அடையாளப்படுத்தும் ஆண்டவர் இயேசுவுக்கு நம்மால் என்ன செய்யமுடியும் என்பதே, இறுதித் தீர்வையின் அளவுகோல் என்பதால், அதை மையப்படுத்தி, வறுமையை போக்கும் முயற்சிகளில் திருஅவை ஈடுபட்டுவருகிறது என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள், ஐரோப்பிய கருத்தரங்கில் வழங்கிய உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.