2016-10-19 15:09:00

இரக்கத்தின் தூதர்கள் : நோயுற்றோரைக் கனிவுடன் பேணிய புனிதர்


அக்.19,2016. “பசியாய் இருப்பவர்க்கு உணவளித்தல், தாகமாய் இருப்பவரின் தாகம் தணித்தல், ஆடையின்றி இருப்பவர்க்கு ஆடை கொடுத்தல், அந்நியரை வரவேற்றல், நோயுற்றிருப்போரைக் குணமாக்குதல், கைதிகளைச் சந்தித்தல், இறந்தோரை அடக்கம் செய்தல்” ஆகிய ஏழு, உடல் சார்ந்த இரக்கச் செயல்களை, இரக்கத்தின் யூபிலி ஆண்டில், நாம் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டுமென அழைப்புப் பெற்றுள்ளோம். இயேசுவும், இறுதித் தீர்ப்பு நாளில், நேர்மையாளர்களைப் பார்த்து, “நான் ஆடையின்றி இருந்தேன், எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன் என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்…(மத்.25,36)” என்று சொல்வார் என, மத்தேயு நற்செய்தியில் வாசிக்கிறோம். நோயுற்றிருப்போரைக் குணமாக்குதல் என்ற இரக்கச் செயலை, மிகுந்த கனிவுடன் ஆற்றியிருப்பவர், புனித மரிய பெர்த்தில்லா பொஸ்கார்தின். செவிலியரும், இத்தாலிய அருள்சகோதரியுமான புனித மரிய பெர்த்தில்லா, முதல் உலகப் போரில், விமானப்படைத் தாக்குதலுக்குப் பலியானவர்கள் மற்றும், நோயாளிச் சிறாரை அன்புடன் பராமரித்து வந்தவர்.

வட இத்தாலியில், விச்சென்சா நகருக்கருகில், பிரென்தோலா எனும் ஊரில், ஏழை விவசாயக் குடும்பத்தில், 1888ம் ஆண்டு பிறந்தார் புனித மரிய பெர்த்தில்லா பொஸ்கார்தின். இவரது தந்தை, தினமும் குடித்துவிட்டு, குடும்பத்தின்மீது அக்கறையின்றி நடந்துகொண்டார். தந்தையின் வன்முறையான மூர்க்கச் செயல்களால், பெர்த்தில்லாவும் அதிகம் காயமடைந்தார். எனவே, குடும்பத்திற்கு உதவுவதற்கு, பெர்த்தில்லா, வீட்டிலும், வயலிலும் வேலை செய்தார். பக்கத்து வீட்டில் வேலை செய்துகொண்டு, எப்போதாவது பள்ளிக்குச் சென்று வந்தார். இவரது கல்வி அறிவின்மையைப் பார்த்து, பலரும் எள்ளி நகையாடினர். இவரின் சுறுசுறுப்பற்ற தன்மையினால், உள்ளூர் அருள்பணியாளரும், வாத்து என்றே பெர்த்தில்லாவை அழைத்தார். ஆயினும், பெர்த்தில்லா, தனது 16வது வயதில், இறையழைத்தலை உணர்ந்தார். இதனால் ஒவ்வொரு கன்னியர் இல்லமாக ஏறி இறங்கினார். பெர்த்தில்லாவிடம் சுறுசுறுப்பும், அறிவும் இல்லை என்று சொல்லி, பல சபைகள் புறக்கணித்தன. இறுதியில், விச்சென்சாவில், புனித டாரத்தியின் ஆசிரியர்கள் என்ற, திருஇதய பெண்கள் சபை, பெர்த்தில்லாவை ஏற்றுக்கொண்டது. இவர், 1904ம் ஆண்டில், இச்சபையில் சேர்ந்து, மரிய பெர்த்தில்லா என்ற பெயரை ஏற்றார்.

மரிய பெர்த்தில்லா, தனது நவதுறவு பயிற்சியாளரிடம், நான் அறிவற்றவள், எனக்கு எதுவுமே தெரியாது, ஆனால் நான் ஒரு புனிதையாக வேண்டும், அதற்கு எனக்குக் கற்றுத்தாருங்கள் என்று கெஞ்சிக் கேட்டார். அங்கு மரிய பெர்த்தில்லா, மூன்றாண்டுகள், சமையல் மற்றும் துணி துவைக்கும் சலவை வேலைகளைச் செய்து வந்தார். பின்னர், த்ரேவிசோ நகரின், நகராட்சி மருத்துவமனையில், செவிலியர் பணியைக் கற்றுக்கொள்வதற்காக, சபை இவரை அனுப்பி வைத்தது. அங்குப் படித்துக்கொண்டே, சமையல் வேலையும் செய்தார். செவிலியர் பயிற்சிப் படிப்பு முடிந்ததும், அம்மருத்துவமனையில், வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட சிறார் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வாய்ப்பு அருள்சகோதரி பெர்த்தில்லாவுக்கு கிடைத்தது. அச்சமயத்தில், காப்போரெத்தோவில் நடந்த கடும் சண்டையைத் தொடர்ந்து, த்ரேவிசோ நகர் கடுமையாய்த் தாக்கப்பட்டது. அந்நகர் மருத்துவமனை, இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அங்கு அருள்சகோதரி பெர்த்தில்லா, நோயாளிகளை, அன்புடன், அயராது கவனித்த விதம், குறிப்பாக, கடின நோயாளிகளைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற விதம், இராணுவ அதிகாரிகளையும், மற்றவரையும் ஈர்த்தது.

எனினும், இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மருத்துவமனையில், அருள்சகோதரி பெர்த்தில்லா பணியாற்றுவதை இல்லத் தலைவி விரும்பவில்லை. அதனால், இவரை, மீண்டும் சலவைத் தொழில் கூடத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால், சபைத் தலைமைச் சகோதரி, இவரை மீண்டும், அம்மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில், தனித்துவிடப்பட்டிருந்த குழந்தைகளுக்குப் பொறுப்பாளராக நியமித்தார். ஏற்கனவே, நோயால் தாக்கப்பட்டிருந்த அருள்சகோதரி பெர்த்தில்லாவின் உடல்நலம் மேலும் குன்றியது. அவர் உடம்பில் பல ஆண்டுகளாக வளர்ந்துவந்த கட்டி பெரிதானது. அதை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கும்போதே அருள்சகோதரி பெர்த்தில்லாவின் உயிர் பிரிந்தது. 1922ம் ஆண்டு அக்டோபர் 20ம் நாள், இவரை, இறைவன் இம்மண்ணக வாழ்விலிருந்து எடுத்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 34. இவர் புதுநன்மை வாங்கியபோது பங்குக்குரு கொடுத்த சிறிய மறைக்கல்வி ஏடு, இவரின் துறவு ஆடை பாக்கெட்டில் இருந்ததை, அவர் இறந்த பின்னர் கண்டுபிடித்தனர்.      

அருள்சகோதரி பெர்த்தில்லாவின் எளிமை, பக்தி, கனிவான கவனிப்பு எல்லாரையும் கவர்ந்தது. “வீரம் நிறைந்த நற்பண்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆன்மா, பணியாற்றிய மருத்துவமனையில், மனிதத் துன்பங்களை அகற்றுவதற்கு, வானதூதருக்கு ஈடான நிவாரணம் தந்தவர்…” என்று இவரது கல்லறையில் எழுதி வைத்தனர். முதலில் த்ரேவிசோவில் இவரது கல்லறை இருந்த இடத்திற்கு மக்கள் கூட்டம் சென்றது. பின்னர், விச்சென்சா நகருக்கு அது மாற்றப்பட்டவுடன், அங்கு மக்கள் திரளாக வந்தனர். பல புதுமைகளும் நடந்தன. அருள்சகோதரி பெர்த்தில்லா இறந்து 39 ஆண்டுகளுக்குப் பின்னர், 1961ம் ஆண்டு, மே 11ம் தேதி, புனித திருத்தந்தை 23ம் ஜான், அவரைப் புனிதராக அறிவித்தார். இந்நிகழ்வில், இவரது குடும்ப உறுப்பினர்களும், இவரது சில நோயாளிகளும் கலந்துகொண்டனர்.   

“ஆண்டவரே, உமது விருப்பத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்” என்பதே, புனித அருள்சகோதரி மரிய பெர்த்தில்லாவின் தாரக மந்திரம். இப்புனிதரின் விழா அக்டோபர் 20. அன்பர்களே, தனிமையில் வாடும் நோயுற்றிருப்போர் நிலையைப் புரிந்து, அவர்களைச் சந்திப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.