2016-10-18 15:45:00

மத்தியக் கிழக்கில் நிலவும் நம்பிக்கையின்மைகளை களைவோம்


அக்.18,2016. ஒருவர் ஒருவரிடையே நம்பிக்கையின்மைகளும், மனிதகுல நெருக்கடிகளும் அதிகரித்து, அரசியல் விருப்பார்வங்கள் குறைந்துவரும் ஈராக் நாட்டில், ஒப்புரவின் அடையாளங்களாக கிறிஸ்தவர்கள் செயல்பட முடியும் என்றார் அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் அல்பெர்த்தோ ஒர்த்தேகா.

மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதையும் அழித்துவரும் தற்போதைய மோதல்களை முடிவுக்குக் கொணர, அரசியல் விருப்பார்வம் தேவைப்படுகிறது என்ற, ஈராக் மற்றும் ஜோர்டன் நாடுகளுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் ஒர்த்தேகா அவர்கள், அமைதியைக் கொணரவும், அதனை ஊக்குவிக்கவும், அனைத்துலக சமுதாயம் உண்மையிலேயே விரும்பினால், உரையாடல்களை ஊக்குவித்து, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றார்.

தனிப்பட்ட இலாபங்களையோ, தனியார் நாடுகளின் சுய நலங்களையோ தலைதூக்க விடாமல், பொதுமக்களின் நலனை மனதில் கொள்ளும்போதே, உரையாடல்கள் வெற்றியடைய முடியும் எனவும் கூறினார் பேராயர்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பினும், கடந்த காலங்களில் அவர்கள் செயல்பட்டதுபோல், தற்போதும் அமைதி, ஒப்புரவு மற்றும் ஒன்றிப்பின் கருவிகளாக அவர்கள் செயல்பட முடியும், அதிலும் குறிப்பாக, இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், என உரைத்த பேராயர் ஒர்த்தேகா அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதி மக்களிடையே காணப்படும் நம்பிக்கையின்மைகள் முதலில் களையப்பட உதவ வேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : CNA/EWTN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.