2016-10-18 15:04:00

நல்ல மேய்ப்பர் அதிகாரத்தையும் பணத்தையும் வெறுப்பவர்


அக்.18,2016. நல்ல மேய்ப்பர் என்பவர், அதிகாரம், பணம் அல்லது தன்னலக் குழுக்களைப் பின்செல்லாமல், இயேசுவைப் பின்செல்பவர் என்றும், எல்லாரும் கைவிட்டாலும் அது குறித்து, கவலைப்படாமலும், வெறுப்படையாமலும் இருப்பவர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தியாளர் புனித லூக்காவின் விழாவாகிய இச்செவ்வாய் காலையில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், நிறைவேற்றிய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எல்லாராலும் கைவிடப்பட்டு, பொருள்கள் எதுவுமின்றி, பிச்சைக்காரர்கள் போன்று, எல்லாவற்றுக்கும் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட பவுலடிகளார் போன்ற திருத்தூதர்கள், வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எதிர்கொண்ட இன்னல்கள் பற்றிக் கூறும் பவுலடிகளார் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது மடலை மையமாக வைத்து மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, புனித பவுல் போன்று, திருத்தூதர் பேதுருவும், திருமுழுக்கு யோவானும், வாழ்வின் இறுதிக் காலத்தில் கைவிடப்பட்ட நிலைமையை அனுபவித்தனர் என்று கூறினார்.

மிக அண்மைக் காலத்தில் வாழ்ந்த, உலகளாவிய அப்போஸ்தலிக்க இயக்கத்தை உருவாக்கிய புனித மாக்ஸ்மிலியன் கோல்பே அவர்களும், இதேபோல் தனிமையில், வதை முகாமில், சிறையில் இறந்தார் என்றும் கூறிய திருத்தந்தை, இயேசுவுக்கு பிரமாணிக்கமாக இருக்கும், எந்த ஒரு திருத்தூதரும், இயேசுவின் இறுதி வாழ்வு போன்ற ஒரு முடிவை எதிர்நோக்கலாம் என்றும் கூறினார்.

ஒரு மேய்ப்பர், தனது வாழ்நாளில், விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாக இல்லாமல், அதிகாரம், பணம், தனது குழு என, பல காரியங்களோடு இணைந்திருந்தால், மரணத்தின்போது அவர் தனியாக இருக்கமாட்டார், ஆனால், அவரின் உடைமைகளை எடுத்துக்கொள்வதற்கு, அவர் இறப்பதற்காக, அவரின் வாரிசுகள் காத்திருக்கலாம் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வாழும் பல வயது முதிர்ந்த அருள்பணியாளர்கள், தங்களின் வேதனைகளின் மத்தியிலும், ஆண்டவருக்கு மிக நெருக்கமாக எவ்வாறு வாழ்கின்றனர் என்பதையும் மறையுரையின் இறுதியில் விவரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு நல்ல மேய்ப்பர் இயேசுவின் பாதையில் பயணம் செய்தால், ஆண்டவர், அவரின் வாழ்வின் இறுதிவரை அவரோடு நெருக்கமாக இருப்பார், இந்த உறுதிப்பாட்டை மேய்ப்பர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் மேய்ப்பர்களுக்காகச் செபிக்குமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

மேலும், “ஆண்டவரே, எமக்கு உதவி செய்ய வாரும்! அமைதியைத் தாரும், அமைதியின் பாதையில் எம்மை வழிநடத்தும். மரியே, எங்கள் தாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.