2016-10-18 14:56:00

குவாலியர் மறைமாவட்ட புதிய ஆயர் தாமஸ் தென்னாட்


அக்.18,2016. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி தாமஸ் தென்னாட்(Thomas Thennatt) அவர்களை, இச்செவ்வாயன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குவாலியர் மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிவந்த ஆயர் ஜோசப் கைதத்தரா(Joseph Kaithathara) அவர்களின் பணி ஓய்வை ஏற்று, பல்லோட்டைன் சபை அருள்பணி தாமஸ் தென்னாட் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை.

கேரளாவின், கோட்டயம் மறைமாவட்டத்தின் கூடலூரில், 1953ம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் தாமஸ் தென்னாட் அவர்கள், பல்லோட்டைன் துறவு சபையில் சேர்ந்து, 1975ம் ஆண்டில், இறுதி வார்த்தைப்பாடு கொடுத்து, 1978ம் ஆண்டில், அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்றார்.

அமராவதி, ஏலூரு, இன்டோர், ஜாபுவா போன்ற மறைமாவட்டங்களில் பங்குக் குருவாகவும் நாக்பூர் பல்லோட்டின் சபை மாநிலத்தில் ஆலோசகராகவும், இந்திய துறவு சபைகள் அவையின் தலைவராகவும், இவ்வாறு பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார் புதிய ஆயர் தாமஸ் தென்னாட்.

2012ம் ஆண்டு முதல், நாக்பூர் உயர்மறைமாவட்டத்திலுள்ள மான்கபூர் பங்குக்குருவாகவும், நாக்பூர் பகுதியின் மேய்ப்புப்பணி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி வந்தார் புதிய ஆயர் தாமஸ் தென்னாட்.

போபால் உயர்மறைமாவட்டத்திலிருந்து 1999ம் ஆண்டில் பிரிந்த குவாலியர் மறைமாவட்டத்தில் வாழும் 65 இலட்சம் மக்களில், 4,900 பேர் கத்தோலிக்கர். குவாலியர் மறைமாவட்டத்தின் 13 பங்குத்தளங்களில், 33 அருள்பணியாளர்களும், 68 அருள்சகோதரிகளும், 11 குருத்துவ மாணவர்களும் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.