2016-10-18 15:30:00

அணு ஆயுதத் தடைக்கு திருப்பீடம் முழு ஆதரவு


அக்.18,2016. உலகில், அணு ஆயுதங்கள் பரவத் தொடங்கிய காலம் முதல், அவை முழுமையாக தடை செய்யப்பட வேண்டுமென்று, திருப்பீடம் தொடர்ந்து விண்ணப்பித்து வருவதாக, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் கூறினார்.

ஐ.நா. பொது அவையின் 71வது அமர்வில், அணு ஆயுதக் களைவு குறித்த விவாதத்தில், இத்திங்களன்று அறிக்கை சமர்ப்பித்த, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், அணு ஆயுதங்கள் உலகில் முழுமையாக தடை செய்யப்பட வேண்டுமென்பதில் திருப்பீடத்தின் நிலைப்பாட்டை எடுத்துச் சொன்னார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், Trinity  அணுச் சோதனை நடத்தப்படுவதற்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 1943ம் ஆண்டு பிப்ரவரியில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், அணுசக்தியின் ஆபத்தான பயன்பாடு குறித்த தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டதைக் குறிப்பிட்டார் பேராயர் அவுசா.

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் போடப்பட்டதற்குப் பின்னர், அணு ஆயுதங்களின் கடும் விளைவுகளை எடுத்துக்கூறி, அணு ஆயுதப் போட்டிகள் நிறுத்தப்படுவதற்கும், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார் என்பதையும் ஐ.நா.வில் சுட்டிக்காட்டினார் பேராயர் அவுசா.

அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதற்கு, மேலும் எட்டு நாடுகளின் கையொப்பம் தேவைப்படும்வேளை, அந்நாடுகள் இதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்திய பேராயர் அவுசா அவர்கள், உலகளாவிய அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்த ஒப்பந்தம் எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் விவரித்தார்.

1945ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, அதிகாலை 5.30 மணிக்கு, நியு மெக்சிகோவில், Los Alamos அறிவியலாளர்கள், புளூட்டோனியம் அணுகுண்டு சோதனையை நடத்தினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.