2016-10-17 16:58:00

பள்ளிக்குச் செல்ல இயலா 5 கோடியே 80 இலட்சம் குழந்தைகள்


அக்.17,2016. தடுக்கவல்ல, மற்றும் எளிதில் குணமாக்கவல்ல நோய்களால் ஒவ்வோர் ஆண்டும், உலகில் 60 இலட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக 'Save the Children' என்ற பிறரன்பு அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.

நோய்களால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, ஒவ்வோர் ஆண்டும், 60 இலட்சமாக இருக்கும் அதேவேளை, 5 கோடியே 80 இலட்சம் குழந்தைகள், ஏழ்மை காரணமாக, பள்ளிக்குச் செல்ல இயலா நிலையும் இருப்பதாக, 'Save the Children' அமைப்பு, கூறியுள்ளது.

கடைசிக் குழந்தைவரை, அனைவருக்கும் உணவும், கல்வியும் வழங்குவதுடன், அவர்களுக்குத் தேவையான எதிர்காலத்தையும் உருவாக்கிக் கொடுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்த பிறரன்பு அமைப்பு, 1990ம் ஆண்டிலிருந்து, தடுக்கவல்ல நோயால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும், பள்ளிக்குச் செல்லாதிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளபோதிலும், இன்னும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன என்று தெரிவிக்கிறது.

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40 கோடி பேர் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்வதாகவும், பெரும் எண்ணிக்கையிலானோர் பல்வேறு காரணங்களுக்காக பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகவும் 'Save the Children' அமைப்பு, மேலும் கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.