2016-10-17 16:35:00

செபத்தின் உதவியுடன் போராடி வெற்றி பெற்றவர்களே புனிதர்கள்


அக்.17,2016. செபம் எனும் மறையுண்மைக்குள் முழுமையாக நுழைந்து, செபத்தின் உதவியுடன் போராடி, இறை உதவியுடன், இறைவனோடு இணைந்து, வெற்றி வாகைச் சூடுபவர்களே, புனிதர்கள் என இஞ்ஞாயிறன்று புனிதர் பட்டமளிப்பு விழாத் திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ப்ரெஞ்ச் புரட்சியின்போது தலைவெட்டப்பட்டுக் கொல்லப்பட்ட, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருளாளர் Salomone Leclercq, மெக்சிகோவில், கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறைக் கலகத்தின்போது கொல்லப்பட்ட அந்நாட்டின் அருளாளர் Giuseppe Sánchez del Río, நாசரேத் திருநற்கருணை மறைபோதக சபையை ஆரம்பித்த, இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆயர் அருளாளர் Manuel González García,  அமலமரி புதல்வர்கள் சபையைத் தொடங்கிய, இத்தாலியரான அருளாளர் அருள்பணி Lodovico Pavoni, புனித திருமுழுக்கு யோவான் சகோதரிகள் சபையை நிறுவிய இத்தாலியரான அருளாளர் Alfonso Maria Fusco,  ஏழைகள் மற்றும் நோயாளர்க்குச் சேவையாற்றியவரும், தனது வாழ்நாள் முழுவதும் தொழுநோயால் துன்புற்றவருமான‌ அர்ஜென்டீனா நாட்டு அருளாளர் அருள்பணி Jose Gabriel del Rosario Brochero,  ப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த கார்மேல் சபை அருள்சகோதரி, தியான யோகி  அருளாளர் Elisabetta della Trinità ஆகிய ஏழுபேரை புனிதர்களாக அறிவித்த திருப்பலியில் செபத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த ஏழு புதிய புனிதர்களும் செபத்தின் துணைகொண்டு போராடி வெற்றிபெற்றவர்கள் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்லெக்குக்கு எதிரான போரில் கைகளை உயர்த்தி செபிக்க, மோசேக்கு ஆரோனும் ஹுர்ம் உதவியதுபோல், நம் சகோதர சகோதரிகளின் செபங்கள் நமக்கு உதவுகின்றன என்றார்.

தொடர்ந்து செபிப்பதில் நாம் சோர்வடைந்தாலும், நாம் தனியாக இல்லை, ஏனெனில் நம் உறவுகள், மற்றும் நண்பர்களின் செபங்கள் நம்மைப் பின்தொடர்கின்றன என மேலும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.