2016-10-15 16:18:00

பொதுக்காலம் - 29ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


உலகமக்களின் கவனத்தை ஈர்த்த ஓர் அற்புத நிகழ்ச்சி 2010ம் ஆண்டு, அக்டோபர் 12, நள்ளிரவில் நிகழ்ந்தது. தென் அமெரிக்காவின் சிலே நாட்டில், மக்கள் தூங்காமல் விழித்திருந்தனர். நள்ளிரவு தாண்டி பத்து நிமிடங்களில், அந்த நாடே மகிழ்ச்சி ஆரவாரத்தில் வெடித்தது.

2010ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி சிலே நாட்டின் Atacama பகுதியில் தாமிரம், மற்றும் தங்கம் வெட்டியெடுக்கும் சுரங்கம் ஒன்றில் 33 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால் ஏழு இலட்சம் டன் எடையுள்ள பாறைகள் சுரங்கப் பாதையை அடைத்துவிட்டன. அந்த 33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில் 2,500 அடி ஆழத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். அவர்கள் உயிரோடு இருக்கின்றனர் என்ற உண்மையே, 17 நாட்கள் சென்ற பிறகே கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து அவர்களை மீட்கும் போராட்டம் ஆரம்பமானது.

புதையுண்ட தொழிலாளர்களுக்கு உடல் அளவில் செய்யப்பட்ட உதவிகளை விட, அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை வளர்க்க வழங்கப்பட்ட ஆன்மீக உதவிகள், செப உதவிகள் ஏராளம். 2010ம் ஆண்டு திருத்தந்தையாக இருந்த 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் கைப்பட ஆசீர்வதித்த செபமாலைகளை அனுப்பிவைத்தார். பூமிக்கடியில் புதையுண்ட தொழிலாளர்கள் மேற்கொண்ட செபங்களும், பூமிக்கு மேலிருந்து எழுப்பப்பட்ட செபங்களும் அந்த 33 பேரையும் உயிரோடு பூமியின் மேல்பரப்பிற்குக் கொணர்ந்தன. இந்தச் சாதனை முடிந்ததும், அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை: "சிலே நாடு, இன்று உயிர்ப்பின் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்துள்ளது."

மனம்தளராமல், நம்பிக்கையுடன் செபிப்பதைக் குறித்து சிந்திக்க இந்த ஞாயிறன்று அழைக்கப்பட்டுள்ளோம். கடுகளவு நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையுடன் செபங்கள் எழுப்பப்பட்டால், மலைகள் பெயர்ந்துவிடும், மரங்கள் வேருடன் எடுக்கப்பட்டு, கடலில் நடப்படும். எரிக்கோவின் மதில்கள் இடிந்துவிழும் என்ற நம்பிக்கை தரும் சொற்கள் விவிலியத்தில் உள்ளன.

செபத்தின் வல்லமையால் இஸ்ரயேல் மக்கள் போரில் வெற்றி கொள்வதை, விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் (விடுதலைப் பயணம் 17: 8-13) நமக்குக் கூறுகிறது. மத்தியக் கிழக்குப் பகுதியின் பல நாடுகளுக்கு, கனவிலும், நனவிலும் அச்சமூட்டுபவர்களாக இருந்தவர்கள், அமலேக்கியர்கள். அவர்களை எதிர்க்க யாருக்கும் துணிவு இல்லை. அவர்கள், இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகப் போர் தொடுக்க வந்தனர். இச்செய்தியே, இஸ்ரயேலரின் நம்பிக்கையைக் குலைத்து, அவர்களது தோல்வியை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், மோசேயின் செபம் அவர்களை வெற்றியடையச் செய்தது.

செபத்தின் வலிமையால் எதிர்வரும் சக்திகளை முறியடிக்கலாம் என்பதை, விடுதலைப் பயண நூல் வாசகம் சொல்கிறது. மனம் தளராமல் செபிப்பதால், நீதியை நிலை நிறுத்த முடியும் என்பதை லூக்கா நற்செய்தி (லூக்கா 18: 1-8) சொல்கிறது. தொடர்ந்து செபியுங்கள், தளராது செபியுங்கள், உடல் வலிமை, மன உறுதி இவை குலைந்தாலும், பிறர் உங்களைத் தாங்கிப் பிடிக்க, தொடர்ந்து செபியுங்கள்... என்று இவ்வாசகங்கள் வழியே, சவால்கள் நிறைந்த பாடங்கள் நமக்குச் சொல்லித்தரப்படுகின்றன.

”அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்” (லூக்கா 18: 1) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது இறைவனுக்கு அஞ்சாமல், மனிதர்களை மதிக்காமல், ஊழலில் ஊறிப்போன ஒரு நடுவரிடம், ஒரு கைம்பெண் நீதி பெறுகிறார்... இலஞ்சம் கொடுத்துப் பெறவேண்டியதை, இலட்சிய வெறிகொண்டு பெறுகிறார். நல்லது கெட்டது என்பதையெல்லாம் பார்க்க மறுத்து, பாறையாகிப்போன நடுவரின் மனதைத் தன் தொடர்ந்த வேண்டுதல் முயற்சிகளால் கரைத்துவிடுகிறார், அந்தக் கைம்பெண்.

மனம் தளராமல் செபிப்பதால் விழையும் நன்மைகளைக் கூறும் பல நூறு கதைகளில், என் மனதில் இடம் பிடித்த ஒரு கதை இது:

டாக்டர் அகமத், தலைசிறந்த மருத்துவர். பல ஆண்டுகள் அவர் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியதால், அகில உலக மருத்துவர் கழகம் அவருக்கு விருது ஒன்றை அறிவித்தது. பக்கத்து நாட்டில் நடைபெறும் அகில உலக கருத்தரங்கில் அவ்விருதை வழங்க, அக்கழகம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.

விருது நாளன்று காலை, அவர் தன் நாட்டிலிருந்து விமானத்தில் பயணம் மேற்கொண்டார். விமானம் கிளம்பி, ஒரு மணி நேரத்தில் விமானத்தில் பிரச்சனை ஒன்று உருவானதால், அருகிலிருந்த ஓர் ஊரில் விமானம் தரையிறக்கப்பட்டது. டாக்டர் அகமத் அவர்கள், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, தன் மாநாட்டைப் பற்றிக் கூறி, எப்படியாவது அங்கு செல்ல ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று கேட்டார்.

அடுத்த 10 மணி நேரத்திற்கு வேறு விமானங்கள் அவ்வழியே செல்லாது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இருப்பினும், டாக்டர் அகமத் விரும்பினால், ஒரு வாடகைக் காரில் அந்த ஊருக்குச் செல்லலாம் என்றும், அதற்கு நான்கு மணி நேரங்கள் எடுக்கும் என்றும் குறிப்பிட்டனர்.  

வேறு வழியின்றி, டாக்டர் அகமத் அவர்கள், வாடகைக் கார் ஒன்றை பதிவுசெய்து, செல்லவேண்டிய ஊருக்கு வழியைக் கேட்டுக்கொண்டு, காரை ஓட்டிச் சென்றார். வழியில், திடீரென, எவ்வித முன்னறிவிப்புமின்றி, புயல் ஒன்று உருவானது. கனமழை பெய்ததால், அவர் செல்லவேண்டிய பாதையைத் தவறவிட்டார். அந்தப் பாதையில் இரண்டு மணி நேரங்கள் ஒட்டியபின், களைப்பாலும், பசியாலும் சாலையின் ஓரமாகக் காரை நிறுத்தினார். அருகில் ஏதாவது தொலைபேசி வசதி இருந்தால், விருது விழாவை ஏற்பாடு செய்தவர்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று எண்ணினார்.

பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அங்கு சென்று கதவைத் தட்டினார். வயதான ஒரு பெண் கதவைத் திறந்தார். அங்கு தொலைபேசி ஏதும் உண்டா என்று டாக்டர் கேட்டதற்கு, தன்னிடம் அந்த வசதி இல்லை என்று கூறிய அப்பெண், டாக்டர் அகமத் அவர்கள், இருந்த நிலையைக் கண்டு, உள்ளே வந்து ஏதாவது சூடாகக் குடியுங்கள் என்று அழைத்தார்.

அந்த அழைப்பை ஏற்று, டாக்டர் உள்ளே சென்றார். அவருக்கு வேண்டிய உணவையும், தேநீரையும் பரிமாறிய அந்தப் பெண், தான் துவங்கிய செபத்தை முடித்துவிட்டு வருவதாகக்  கூறி, அருகிலிருந்த ஒரு தொட்டில் அருகில், முழந்தாள் படியிட்டு தன் செபத்தைத் தொடர்ந்தார்.

மனமுருகி, கண்ணீருடன் அவர் செபித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர், அவருக்கு உதவி செய்ய எண்ணினார். அவர் செபத்தை முடித்துவிட்டு வந்ததும், அவரது கண்ணீருக்கும், செபத்திற்கும் காரணம் கேட்டார். அந்த வயதானப் பெண், "இறைவன் என் வேண்டுதல்கள் அனைத்திற்கும் பதில் வழங்கியுள்ளார். ஒரே ஒரு செபத்திற்கு மட்டும் இறைவன் இன்னும் பதில் தரவில்லை" என்று கூறினார்.

அந்த செபம் என்ன, அந்தத் தொட்டிலில் இருப்பது யார் என்று கேள்விகள் எழுப்பிய டாக்டரிடம், அவர் விவரங்கள் சொன்னார்: "தொட்டிலில் உறங்குவது என் பேரக்குழந்தை. அவனுடைய பெற்றோர் இருவரும் அண்மையில் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். என் பேரனுக்கு வினோதமான ஒரு புற்றுநோய் உள்ளது. அந்தப் புற்றுநோயைக் குணமாக்கும் திறமை கொண்டவர், பக்கத்து நாட்டில் உள்ள ஒரே ஒரு மருத்துவர். அவர் பெயர் டாக்டர் அகமத் என்பது மட்டும் தெரியும். அவரைச் சென்று பார்க்கும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை. அதனால், ‘இறைவா, அந்த டாக்டரிடம் எப்படியாவது எங்களைக் கொண்டு சேர்த்துவிடு’ என்பது ஒன்றே, நான் தினமும் எழுப்பும் வேண்டுதல்" என்று கூறி முடித்தார் அந்தப் பெண்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் அகமத் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவர் தன் கதையைச் சொன்னார்... தான் விருது வாங்கப் புறப்பட்டது, விமானம் பழுதடைந்தது, புயலால் தான் வழியைத் தவறவிட்டது, அந்த இல்லத்தின் கதவைத் தட்டியது என்று, அன்று காலை முதல் தனக்கு நிகழ்ந்ததையெல்லாம் கூறிய டாக்டர் அகமத், அந்தப் பெண்ணிடம், "நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் டாக்டர் அகமத் நான்தான்" என்று கூறினார்.

செபத்தைக் குறித்து, தொடர்ந்து செபிப்பதைக் குறித்து நமது எண்ணங்களை தெளிவுபடுத்த, உள்ளங்களை உறுதிபடுத்த, செபம் நமது வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாற, இறைவனிடம் வரம் வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.