2016-10-15 17:19:00

பசிலிக்காக்களின் புனிதக் கதவுகளை மூடுவதற்கு பிரதிநிதிகள்


அக்.15,2016. இரக்கத்தின் யூபிலி ஆண்டின் நிறைவாக, உரோம் நகரின் மூன்று பாப்பிறை பசிலிக்காக்களின் புனிதக் கதவுகளை மூடுவதற்கு, தனது பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற நவம்பர் 13, ஞாயிற்றுக்கிழமையன்று, உரோம் புனித ஜான் லாத்தரன், புனித மேரி மேஜர், புனித பவுல் ஆகிய மூன்று பாப்பிறை பசிலிக்காக்களின் புனிதக் கதவுகளை மூடும் திருவழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றுவதற்கு, அப்பசிலிக்காக்களின் தலைமைக்குருக்களை நியமித்துள்ளார் திருத்தந்தை.

புனித ஜான் லாத்தரன் பசிலிக்கா தலைமைக்குரு கர்தினால் அகுஸ்தீனோ வல்லீனி.

புனித மேரி மேஜர் பசிலிக்கா தலைமைக்குரு கர்தினால் Santos ABRIL Y CASTELLÓ.

புனித பவுல் பசிலிக்கா தலைமைக்குரு கர்தினால் James Michael HARVEY.

இன்னும், 2017ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் மிலான் உயர்மறைமாவட்டத்திற்குச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பற்றி, செய்தியாளர்களிடம் பேசிய மிலான் மேயர் Giuseppe Sala அவர்கள், திருத்தந்தை, மிலானுக்கு வருகை தருவதை, மிகப் பெருமையாக உணர்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், இறைவனிடம் நெருங்கிச் செல்வதற்கும், நம் வாழ்வை மேம்படுத்துவதற்குமென, இன்னும் அதிகமாகச் செபிக்குமாறு, புனித அவிலா தெரேசா நம்மை அழைக்கிறார் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின. 

புனித அவிலா தெரேசா அவர்களின் விழாவான, அக்டோபர் 15, இச்சனிக்கிழமையன்று, அதிகமதிகமாகச் செபிக்கத் தூண்டும் இப்புனிதரின் வாழ்வை மையப்படுத்தி, திருத்தந்தை, தனது டுவிட்டரில், சொற்களை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.