2016-10-14 15:56:00

பசியை ஒழிக்க, காலநிலை மாற்றத்திற்கெதிரான நடவடிக்கை


அக்.14,2016. வருங்காலத் தலைமுறைகளுக்கென, இப்பூமியைப் பாதுகாப்பதற்கு, நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

அக்டோபர் 16, வருகிற ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் உலக உணவு தினத்தை முன்னிட்டு, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன இயக்குனர் José Graziano da Silva அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

“காலநிலை மாறிக்கொண்டு வருகிறது” என்ற தலைப்பில், இவ்வாண்டின் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுவதைக் குறிப்பிட்டு, இத்தலைப்பே, பசியை ஒழிப்பது குறித்த நம் இலக்கின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுகின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

காலநிலை மாற்றம் குறித்த ஒரு சிக்கலான சூழலை எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், உலகில், பசியை ஒழிப்பதற்கான இலக்கை எட்டுவது மிகவும் கடினமாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, படைப்பின் பாதுகாவலர்களாக நாம் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

உணவுப்பொருள்கள் வீணாக்கப்படும் கலாச்சாரத்திற்கெதிராகவும் தனது கருத்தைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருள்கள், அனைவருக்கும் போதுமானதாக இருப்பதற்கு, அவை சமமாகப் பகிரப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

பொருளாதாரக் காரணங்களுக்காக உணவுப்பொருள்கள் அழிக்கப்படுவது பற்றியும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பாரிஸ் ஒப்பந்தம், வெறும் வார்த்தைகளோடு மட்டும் நின்றுவிடாமல், அது துணிச்சலான தீர்மானங்களாக, செயல்வடிவம் பெற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.