2016-10-13 16:16:00

சிலுவையடியில் நிற்கும் அறிவொளியே அடித்தளம்


அக்.13,2016. அறையப்பட்ட இயேசுவின் சிலுவையடியில் நிற்கும் அறிவொளியை அடித்தளமாகக் கொண்டு கத்தோலிக்கத் திருஅவை கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், மறையுரை வழங்கினார்.

அக்டோபர் 11 இச்செவ்வாய் முதல், 13, இவ்வியாழன் முடிய கர்தினால் பரோலின் அவர்கள் போர்த்துக்கல் நாட்டில் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் நிறைவாக, பாத்திமா அன்னை திருத்தலத்தில், இவ்வியாழன் காலை நிறைவேற்றியத் திருப்பலியில், சிலுவையடியில் நின்ற மரியன்னையை மையப்படுத்தி, மறையுரை வழங்கினார்.

அறையப்பட்ட இயேசுவின் சிலுவைக்கடியில், ஒரு பார்வையாளராக பங்கேற்பது எளிது என்று தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், அன்னை மரியா, சீடர் யோவான் இவர்களைப் போல, இயேசுவின் பாடுகளில் பங்கேற்பதே, சிலுவையடியில் நிற்பதற்குப் பொருள் தரும் என்று கூறினார்.

துன்பங்களால் துடிக்கும் இயேசுவைக் கண்டு, நம்பிக்கை இழந்து நிற்பதற்கு வாய்ப்புண்டு எனினும், நம்பிக்கை தளராமல் நின்ற அன்னை மரியா, இவ்வுலகம் புரிந்துகொள்ள முடியாத அறிவொளி பெற்றவர் என்று கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

மற்றவர்களின் கொடுமைகளைத் தன் மீது தாங்கி இறக்கும் ஒரு மகனின் அருகில், தாய் ஒருவர் நிற்பது, எளிதான காரியம் அன்று, இருப்பினும், அன்னை மரியா அதனைத் துணிவுடன் செய்தார் என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், அன்றைய வழக்கப்படி, சிலுவையில் அறையுண்டவர்கள் பக்கத்தில் உறவினராகிய பெண்கள் இருக்கக்கூடாது என்ற மரபை உடைத்து, அன்னை மரியா அங்கு நின்றது, நமக்கு சிறந்ததொரு பாடம் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.