2016-10-12 16:42:00

வறுமையின் பிடியிலிருந்து பெண்களை விடுவிப்பதே முன்னேற்றம்


அக்.12,2016. பெண்களின் முன்னேற்றம் என்று பேசும்போது, குறிப்பாக, வறுமையில் வாழும் பெண்கள், சிறுமிகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்கு முதலிடம் வழங்கப்படவேண்டும் என்று ஐ.நா. தலைமையகத்தில் பணியாற்றும் திருப்பீடத் தூதர், பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

பெண்குழந்தைகளின் உலக நாள், அக்டோபர் 11ம் தேதி சிறப்பிக்கப்பட்டதையொட்டி, ஐ.நா. பொது அவையின் 71வது அமர்வில், 'பெண்களின் முன்னேற்றம்' என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில், பேராயர் அவுசா அவர்கள் இவ்வாறு பேசினார்.

உலகப் பெண்களில், 35 விழுக்காட்டினர், குடும்பங்களில், உடல் அளவில், குறிப்பாக, பாலியல் தொடர்பான வன்முறைகளைச் சந்திக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் அதிர்ச்சியை அளிக்கிறது என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் பகிர்வில் சுட்டிக்காட்டினார்.

குடும்பங்களில் நிலவும் வன்முறைகளே, சமுதாயத்திலும், பல்வேறு வடிவங்களில் வெளியாகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டதை, தன் உரையில் எடுத்துரைத்த பேராயர் அவுசா அவர்கள், குடும்பங்களில் ஆண் பெண் உறவில், உண்மையான மதிப்பை வளர்ப்பதே, வன்முறைகளை முடிவுக்குக் கொணரும் என்று கூறினார்.

உலகில் நிலவும் வறுமை என்ற கொடுமை, பெரும்பாலும் பெண்களை அதிகம் பாதிப்பதால், பெண்களை வறுமையின் பிடிகளிலிருந்து விடுவிப்பது, அவர்களுடைய முன்னேற்றத்திற்கு அடித்தளம் என்று பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.