2016-10-12 16:15:00

மருத்துவ முன்னேற்றங்கள் ஆப்ரிக்க மக்களை அடைவதில்லை


அக்.12,2016. மருத்துவ உலகில், தொழில்நுட்பம், நோய் தீர்க்கும் முறை, நோய் தடுப்பு முறை ஆகியவற்றில் பெருமளவு முன்னேற்றங்கள் இடம்பெற்றாலும், அவற்றின் பயன்கள், ஆப்ரிக்காவில் வாழும் பெரும்பான்மையான மக்களைச் சென்றடைவதில்லை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில், அக்டோபர் 12, இப்புதனன்று நடைபெற்ற ஜெர்மன்-ஆப்ரிக்க நலவாழ்வு பராமரிப்பு கருத்தரங்கு ஒன்றில், திருப்பீட நீதி அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வழங்கிய தலைமை உரையில் இவ்வாறு கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவை, ஆப்ரிக்காவில் 1298 மருத்துவமனைகள், 5256 மருத்துவ உதவி மையங்கள், 29 தொழுநோயாளர் மையங்கள், 632 முதியோர் இல்லங்கள் ஆகிவற்றை நடத்தி வருகின்றன என்பதை, தன் உரையில் குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், இந்த வசதிகள், மிகவும் பின்தங்கிய இடங்களில் உள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

உலகின் பல பகுதிகளை துன்புறுத்தும் HIV, காசநோய், மலேரியா ஆகிய நோய்கள், ஆப்ரிக்காவிலும் உள்ளன என்று சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன் அவர்கள், இந்நோய்களை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான நிதி உதவிகள், உலக நாடுகளிலிருந்து எளிதாகக் கிடைப்பதில்லை என்பதையும் எடுத்துரைத்தார்.

அக்டோபர் 9, இஞ்ஞாயிறு முதல், 11, இச்செவ்வாய் முடிய உலக நலவாழ்வு உச்சி மாநாடு பெர்லின் நகரில் நடந்ததைத் தொடர்ந்து, அங்கு ஜெர்மன்-ஆப்ரிக்க நலவாழ்வு பராமரிப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.