2016-10-12 16:35:00

ஊழலை ஒழிக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்த வேண்டும்


அக்.12,2016. முதிர்ந்த, அனுபவம் நிறைந்த, ஏழு நீதிபதிகள்,  நைஜீரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது, நாடு ஒரு குழப்பமானச் சூழலில் சிக்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது என்று, நைஜீரியக் கர்தினால், John Onaiyekan அவர்கள் பீதேஸ் (Fides) செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.

நைஜீரியாவில் அனுபவம் மிகுந்த 15 நீதிபதிகளின் இல்லங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், 8 இலட்சம் டாலர்கள் கைப்பற்றப்பட்டன என்றும், அவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையத்தில் விடுவிக்கப்பட்டனர் என்றும் வெளியான செய்திகள் குறித்துப் பேசிய கர்தினால் Onaiyekan அவர்கள், இவ்வாறு கூறினார்.

அரசுத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் நீதித்துறையை கொணரவேண்டும் என்ற முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அவதூறு முயற்சி இது என்று, நாட்டில் கருத்து நிலவுவதை தன் பேட்டியில் குறிப்பிட்ட கர்தினால் Onaiyekan அவர்கள், பொதுவாக, நாட்டில், அனைத்துத் துறைகளிலும் ஊழல் ஆழமாக வேரூன்றியிருப்பதை, இந்நிகழ்வு காட்டுகிறது என்று, தன் வருத்தத்தை வெளியிட்டார்.

ஊழலை ஒழிப்பதாக பறைசாற்றிவரும் நைஜீரிய அரசு, நீதிபதிகள் குறித்த வழக்கில் நடுநிலையோடு செயல்படவேண்டும் என்றும், ஊழலை ஒழிக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், கர்தினால் Onaiyekan அவர்கள் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.