2016-10-11 16:50:00

மெக்சிகோவில் மனமாற்றம், செபத்திற்கு தலத்திருஅவை அழைப்பு


அக்.11,2016. மெக்சிகோவில் அண்மைய நாள்களில் சில அருள்பணியாளர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளவேளை, அந்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் அமைதி நிலவச் செபிக்குமாறு விண்ணப்பித்துள்ளார் மெக்சிகோ ஆயர் ஒருவர்.

மெக்சிகோ சமுதாயத்தில் மிக ஆழமாக வேரூன்றியுள்ள பேராசை, ஊழல், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்தல் ஆகியவை காரணமாக, நாட்டில், வன்முறை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது என்று கூறினார் Papantla ஆயர் José Trinidad Zapata Ortiz.

நாட்டில் பரவலாகக் காணப்படும் நன்னெறி சார்ந்த பிரச்சனைகள் அகற்றப்படுவதற்கும், வன்முறையை ஒழிப்பதற்கும், அரசு ஆவன செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார் ஆயர் Ortiz.

சமுதாயத்தில் கடவுளுக்கு இடமளிக்காமலும், மனிதரும், அவர்களின் உரிமைகளும் மதிக்கப்படாமலும் இருந்தால், நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்ற இயலாது என்றும் எச்சரித்துள்ள ஆயர் Ortiz அவர்கள், அமைதிக்காக செபமாலை செபிக்குமாறும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜெனெய்ரோவுக்கு அருகில், 37 வயது நிரம்பிய அருள்பணி Francisco Carlos Barbosa Tenorio அவர்களின் உடல், இஞ்ஞாயிறன்று, நெடுஞ்சாலை ஒன்றில் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.