2016-10-11 16:43:00

அக்டோபர் 11, உலக சிறுமிகள் தினம்


அக்.11,2016. உலகின் 110 கோடிச் சிறுமிகளின் முன்னேற்றம், 2030ம் ஆண்டின் வளர்ச்சித் திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதைச் சார்ந்துள்ளது என்று, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.

அக்டோபர் 11, இச்செவ்வாயன்று, கடைப்பிடிக்கப்பட்ட, உலக சிறுமிகள் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், சிறுமிகள் திருமணம் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாடுகள் ஒழிக்கப்படுவதற்கான நம் அர்ப்பணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, தரமான கல்வியின்மை, நலவாழ்வு வசதிகளின்மை, பாலியல் வன்செயல் அச்சுறுத்தல் போன்ற சிறுமிகளின் பிரச்சனைகள் களையப்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளார் பான் கி மூன்.

அக்டோபர் 11ம் தேதி, உலக சிறுமிகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதற்கு, ஐ.நா. பொது அவை, 2011ம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.