2016-10-10 16:30:00

மரியாவின் யூபிலி திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


அக்.10,2016. இறைவன் தரும் கொடைகளை, ஆச்சரியத்துடனும், நன்றி உணர்வுடனும் பெற்றுக்கொள்ள இந்த ஞாயிறு நற்செய்தி நம்மை அழைக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

அன்னை மரியாவின் யூபிலி கொண்டாட்டங்களின் நிறைவாக, இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, பத்து தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கிய நிகழ்வை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

தொழுநோயாளர்களை இயேசு நேரடியாகக் குணப்படுத்தாமல், 'குருக்களிடம் காண்பியுங்கள்' என்று அவர்களை அனுப்பியது, அவர்களது விசுவாசத்தைச் சோதிக்க அளிக்கப்பட்ட ஒரு சவால் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அந்த சவாலில் வென்ற ஒன்பதுபேர், நன்றி கூற மறந்து தங்கள் வழியே சென்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சமாரிய இனத்தைச் சேர்ந்த தொழுநோயாளர், தன் விசுவாசத்தால் குணமடைந்ததும், அந்த நலனை முழுமைபெறச் செய்யும் நோக்கத்துடன் இயேசுவைத் தேடிச் செல்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, இயேசுவே உண்மையான பெரிய குரு என்பதையும் அந்த சமாரியர் உணர்ந்தார் என்று எடுத்துரைத்தார்.

"உமக்கு நன்றி" என்ற வார்த்தைகள் நம் வாழ்வில் எத்தனை முறை எழுகின்றன என்ற கேள்வியை தன் மறையுரையில் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் வாழ்வில் பெற்றுக்கொள்ளும் பல கொடைகளை நமக்கு உரியவை என்ற மனநிலையில் பெற்றுக்கொள்வதால், நன்றி கூற மறக்கிறோம் என்று சுட்டிக்காட்டினார்.

படைத்தலைவன் நாமான் தன்னையே தாழ்த்தி, இறையடியாரின் சொற்களுக்கு கீழ்ப்படிந்தபோதுதான் அவர் குணமடைந்தார் என்பதைக் கூறியத் திருத்தந்தை, தன்னையே தாழ்த்தி, இறைவனுக்கு நன்றி பகர்ந்த அன்னை மரியா, நாம் போற்றி வளர்க்க வேண்டிய நன்றி உணர்வுக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு என்று வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.