2016-10-10 16:17:00

பல்லோட்டின் துறவு சபையினருக்கு திருத்தந்தையின் உரை


அக்.10,2016. இரக்கமே உருவான இறைவன் இவ்வுலகிற்கு அனுப்பிய திருத்தூதர் இயேசு என்பதை நன்கு உணர்ந்த புனித வின்சென்ட் பல்லோட்டியை, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் சிறப்பாக நினைவுகூர விரும்புகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பல்லோட்டின் துறவு சபையினரிடம் கூறினார்.

தங்கள் 21வது பொதுப் பேரவையை உரோம் நகரில் நடத்திவரும் பல்லோட்டின் துறவு சபையின் 100க்கும் அதிகமான அகில உலக பிரதிநிதிகளை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

இரக்கம் ஏதுமின்றி இவ்வுலகில் நடைபெறும் வன்முறை நிகழ்வுகளை ஒவ்வொரு நாளும் காணும் நாம், இறைவனின் இரக்கம் அனைத்தையும் வெல்லும் வல்லமை பெற்றது என்பதை நம்புவதற்கு, புனித பல்லோட்டியின் எண்ணங்கள் உதவுகின்றன என்று கூறினார், திருத்தந்தை.

அழைப்பு என்பது ஒரு சிலருக்கு மட்டும் குறிக்கப்படவில்லை, மாறாக, அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பதை நன்கு உணர்ந்த புனித பல்லோட்டி வகுத்த பாதையில், அவருடைய துறவு சபையைச் சேர்ந்தவர்கள் வழிநடக்க, திருத்தந்தை தன் வாழ்த்துக்களைக் கூறினார்.

திருத்தூதர்களின் அரசியான அன்னை மரியாவின் மேல் தனிப்பட்ட பற்று கொண்டிருந்தவர், புனித பல்லோட்டி என்பதை தன் உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அன்னையின் பரிந்துரையால், நடைபெறும் பொதுப் பேரவை நற்கனிகளை தருவதற்கு தன் ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.