2016-10-10 16:11:00

பங்களாதேஷ் நாட்டு மக்களை மதித்து வழங்கியுள்ள ஒரு கொடை


அக்.10,2016. தன்னை கர்தினாலாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளது, பங்களாதேஷ் நாட்டின் மக்களை அவர் மதித்து வழங்கியுள்ள ஒரு கொடை என்று, புதிதாக கர்தினால் பொறுப்பிற்கு நியமனம் பெற்றுள்ள டாக்கா பேராயர், பாட்ரிக் டி ரொசாரியோ அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

இஞ்ஞாயிறன்று Tejgaon என்ற பங்கு கோவிலில் ஞாயிறு திருப்பலியாற்றிக் கொண்டிருந்தபோது தனக்கு இந்தச் செய்தி கிடைத்தது என்பதை, உள்ளம் உருகி சொன்ன பேராயர் டி ரொசாரியோ அவர்கள், தான் மட்டுமல்லாமல், பங்களாதேஷ் மக்கள் அனைவரும் திருத்தந்தைக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் கூறினார்.

மேலும், அறிவிக்கப்பட்டுள்ள 17 கர்தினால்களில் இடம்பெற்றுள்ள ஒரே ஓர் அருள்பணியாளரான Ernest Troshani Simoni அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அல்பேனியா நாட்டில் சந்தித்தார் என்றும், அங்கு அருள்பணி Simoni அவர்கள், கம்யூனிச அடக்கு முறையில் அடைந்த துயரங்களைப் பகிர்ந்துகொண்டது திருத்தந்தையின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது என்றும், CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

1928ம் ஆண்டு பிறந்து, பிரான்சிஸ்கன் துறவு சபையில் இணைந்து, பின்னர் மறைமாவட்ட அருள்பணியாளராகப் பணியாற்றிய Simoni அவர்கள், 1963ம் ஆண்டு கம்யூனிச அரசால் கைது செய்யப்பட்டு, 28 ஆண்டுகள் கடின உழைப்பு முகாமில் துன்புற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews / CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.