2016-10-10 16:06:00

கர்தினால்கள் அவையின் சில புள்ளி விவரங்கள்


அக்.10,2016. இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள 17 புதிய கர்தினால்களில், 5 பேர் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், 4 பேர் வட அமெரிக்காவிலிருந்தும், இருவர் மத்திய அமெரிக்காவிலிருந்தும், மூவர், ஆப்ரிக்காவிலிருந்தும், இருவர் ஆசியாவிலிருந்தும் ஒருவர் ஓசியானாவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 19ம் தேதி கர்தினால்களாக உயர்த்தப்படும் 17 பேரையும் சேர்த்து, தற்போது, கர்தினால்கள் அவையில் 228 பேர் உள்ளனர். 79 நாடுகளை சேர்ந்த இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி பெற்றவர், 121 பேர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள 17 புதிய கர்தினால்களில், சிரியா நாட்டில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிவரும் பேராயர் மாரியோ செனாரி அவர்களும் ஒருவர். 70 வயது நிறைந்த பேராயர் செனாரி அவர்கள், 2004ம் ஆண்டு முதல், 2008ம் ஆண்டு முடிய இலங்கையில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இவரைப்போல, கர்தினாலாக உயர்த்தப்பட்டுள்ள மற்றொரு திருப்பீட அதிகாரி, அண்மையில் வத்திக்கானில் உருவாக்கப்பட்ட புதிய திருப்பீட அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட பேராயர், Kevin Joseph Farrell அவர்கள்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் புதிதாக உருவாக்கப்பட்ட பொதுநிலையினர், குடும்பம் வாழ்வு திருப்பீட அவையின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Farrell அவர்கள், 1947ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்து, பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் அருள்பணியாளராகவும், ஆயராகவும் பணியாற்றியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.