2016-10-10 15:14:00

இது இரக்கத்தின் காலம் : வேண்டாமே அகந்தை, ஆணவம்


நாடாளும் அரசர் ஒருவர், தான் மிகவும் அறிவாளி என்ற அகந்தையோடு இருந்தார். ஒருநாள், அவர் தன்னைக் காணவந்த அடுத்த நாட்டு அரசருடன் விருந்துண்டு மகிழ்ந்தார். அப்போது அவர், எங்கள் நாட்டில் எல்லாருமே என்னைப்போல் அறிவாளிகள். உங்கள் நாட்டில் எப்படி என்று கேட்டார். அதற்கு அடுத்த நாட்டு அரசர், என் நாட்டவர் எல்லாரும் அறிவாளிகளா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் நேரில் வந்து சோதித்துப் பாருங்களேன் என்றார். பின்னர், இருவரும் குதிரையில் புறப்பட்டனர். அவர்கள் அடுத்த நாட்டு எல்லையை அடைந்ததும், அந்த நாட்டு அரசர், வேந்தே, இப்போது நீங்கள் என் நாட்டவரைச் சோதித்துப் பார்க்கலாம் என்றார். முதலில், அவ்விடத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனை அழைத்து, ஏன்டா, ஒளியிலே சிறந்த ஒளி எது என்று கேட்டார், அந்த அகந்தை அரசர். சூரிய ஒளிதான் ஐயா என்று சிறுவன் சொல்ல, பரவாயில்லையே, சரியாகச் சொல்லிவிட்டாயே என்று சொன்னார் அரசர். உடனே சிறுவன், கொஞ்சம் பொறுங்கள் ஐயா, சூரிய ஒளிதான், சிறந்த ஒளி என்று சொல்வார்கள், ஆனால் அது தவறு. ஒளியில் சிறந்தது, அறிவு ஒளிதான். சூரிய ஒளி, பார்வையில்லாதவருக்கு உதவாதே. அறிவு ஒளி இருந்தால், பார்வையில்லாதவர் எல்லாவற்றையும் உணர்வார், எனவே சூரிய ஒளியிலும், அறிவு ஒளியே சிறந்தது என்றான் சிறுவன். அந்த அரசருக்கோ வெட்கம். ஆயினும் கேள்வியைத் தொடர்ந்தார். பூக்களில் சிறந்த எது என்று கேட்டார். தாமரைப் பூ என்றான் சிறுவன். மிகச் சரியான பதில் சொன்னாய் என்றார் அரசர். உடனே அரசரை இடைமறித்த சிறுவன், ஐயா, இப்படித்தான் எல்லா மடையர்களும் சொல்கிறார்கள். ஆனால், உலகிலே சிறந்த பூ பருத்திப் பூதான், ஐயா, மனிதருக்கு உயிரைவிட சிறந்தது மானம் இல்லையா, அந்த மானத்தைக் காப்பது ஆடை, ஆடையைத் தருவது பருத்திப் பூ. ஆகவே பருத்திப் பூதான், பூக்களில் சிறந்தது என்றான் சிறுவன். இந்த மாடு மேய்க்கும் சிறுவனே இவ்வளவு அறிவாளியாக இருக்கும்போது, மற்ற குடிமக்களின் அறிவு பற்றிக் கேட்கவா வேண்டும் என்று நினைத்தார் அரசர். அவரின் அகந்தையும் அன்றோடு அகன்றது. இக்கதையைச் சொன்ன, கிருபானந்த வாரியார் அவர்கள், அறிவாளிக்கு அறிவாளி அகிலத்தில் உண்டு. எனவே அகந்தை, ஆணவம் வேண்டாமே என்று கேட்டுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.