2016-10-08 16:11:00

சிரியா-அமைதிக்காக 10 இலட்சம் சிறார் கையெழுத்து விண்ணப்பம்


அக்.08,2016. சிரியாவில் இடம்பெற்றுவரும் சண்டையை முடிவுக்குக் கொணர்வதற்கு அரசியல் தலைவர்களை மீண்டும் வலியுறுத்தும் நோக்கத்தில், பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட சிரியா நாட்டுச் சிறார், அமைதிக்காக, விண்ணப்பம் ஒன்றில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நடவடிக்கையில், சிரியாவின் பல பகுதிகளில், குறைந்தது இரண்டாயிரம் பள்ளிகள் ஈடுபட்டுள்ளன என்றும், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. நிறுவனம் மற்றும் Brusselsல் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்தை ஈரக்கும் வகையில், இளையோர் படங்கள் வரைந்தும், செய்திகள் எழுதியும் வருகின்றனர் என்றும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

சிரியாவில், பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்திருப்பதால், குறைந்தது 21 இலட்சம் சிறார், பள்ளிக்குச் செல்ல இயலாமல் உள்ளனர்.

இச்சிறாரின் நலனில் அக்கறைகொண்ட, Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்தின் முயற்சியால், அமைதிக்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கையில் சிறார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எங்களுக்கு அமைதி வேண்டும், எங்களது குழந்தைப் பருவத்தைக் கொடுங்கள், போர் இனிமேல் வேண்டாம், நாங்கள் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறோம் என்ற சுலோகங்களைச் சிறார் எழுதிவருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.