2016-10-08 14:15:00

இரக்கத்தின் காலம் - உள்ளதை எண்ணி, நன்றியுடன் வாழ்வது மேல்


முதியோர் இல்லம் ஒன்றில், நோயுற்று படுத்திருந்த, ரோசி என்ற வயதான பெண்ணின் உடலில், ஒவ்வொரு பகுதியாக செயலிழந்து வந்தது. அவ்வில்லத்தில் பணியாற்றச் சென்ற ஓர் இளைஞர், ரோசி அவர்களிடம் காணப்பட்ட மகிழ்வைக்கண்டு ஆச்சரியமடைந்தார். நேரம் கிடைத்தபோதெல்லாம், அந்த இளைஞர், ரோசி அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

நாளடைவில், ரோசியால் தன் கைகளையும், கால்களையும் அசைக்க முடியாமல் போனது. "என் கழுத்தை அசைக்க முடிகிறதே, அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அவர் கூறிவந்தார். ஒருவாரம் சென்று, ரோசியால் தன் கழுத்தையும் அசைக்க முடியவில்லை. "என்னால் பார்க்கவும், கேட்கவும் முடிகிறதே...  அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று ரோஸி புன்சிரிப்புடன் கூறிவந்தது, இளையவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

"உங்களால் பார்க்கவும், கேட்கவும் முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்?" என்று அந்த இளைஞர் ரோஸியிடம் கேட்டார். அதற்கு அவர், "நீ என்னை தினமும் பார்க்க வருகிறாயே, அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அமைதியாகச் சொன்னார்.

இல்லாததை எண்ணி, ஏக்கத்தில் வாழ்வதைவிட, உள்ளதை எண்ணி, நன்றியுடன் வாழ்வது மேல்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.