2016-10-08 15:57:00

ஆணவக் கொலைக்கு எதிரான புதிய சட்டத்திற்கு வரவேற்பு


அக்.08,2016. ஆணவக் கொலைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை, பாகிஸ்தான் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளதை, அந்நாட்டு கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

இப்புதிய சட்டம் குறித்து, ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய, பாகிஸ்தான் தேசிய கத்தோலிக்கப் பெண்கள் நிறுவனத் தலைவர், அருள்சகோதரி ஜெனிவீவ் ராம் லால் அவர்கள், சரியான வழியில் எடுக்கப்பட்டுள்ள ஒரு நடவடிக்கை என்று கூறினார்.

பெண்களுக்கு எதிரான ஆணவக் கொலைகளை நடத்துவோர், இது குறித்த பழைய சட்டத்தை, சாதகமாகப் பயன்படுத்தி, தங்களின் தனிப்பட்ட பழிவாங்கும் உணர்வுகளையும் தீர்த்துக் கொண்டனர் என்றும் கூறினார், அருள்சகோதரி ஜெனிவீவ்.

குடும்பத்திற்கு கெட்ட பெயர் என்று சொல்லி, பாகிஸ்தானில் ஆண்கள், பெண்களைக் கொலை செய்வது பரவலாக இடம்பெற்று வந்தது. ஆயினும், தற்போதைய புதிய     சட்டத்தின்படி, கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் மன்னிப்பு கொடுத்தாலும், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். இந்த மன்னிப்பு, குற்றவாளியை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும், இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில், 94 ஆணவக் கொலைகள் இடம்பெற்றுள்ளன என்று, ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.