2016-10-07 16:31:00

கொலம்பிய அரசுத் தலைவருக்கு நொபெல் அமைதி விருது


அக்.07,2016. கொலம்பிய அரசுத்தலைவர் ஹூவான் மானுவேல் சாந்தோஸ் அவர்களுக்கு, 2016ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது, இவ்வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவில், FARC மார்க்சீய புரட்சியாளர்களுடன் இடம்பெற்ற 52 ஆண்டு உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, அரசுத்தலைவர் சாந்தோஸ் அவர்கள் எடுத்த முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக, இந்த அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று, நொபெல் விருதுக்குழு அறிவித்தது.

கொலம்பியாவில், நிலவிவந்த உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொணரும் ஒரு முயற்சியாக, இருதரப்பினருக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை முக்கிய பங்காற்றியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

நவீன கால வரலாற்றில், நீண்ட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டை என்று சொல்லப்படும் கொலம்பியச் சண்டையில், 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஏறத்தாழ அறுபது இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். 

கடந்த ஜூன் 22ம் தேதி, கொலம்பிய அரசுக்கும், FARC மார்க்சீய புரட்சியாளர்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த அமைதி ஒப்பந்தம் குறித்து, கடந்த வாரத்தில், கொலம்பியாவில் நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில், 50.23 விழுக்காட்டு மக்கள் அதைப் புறக்கணித்துள்ளனர், 49.76 விழுக்காட்டினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எனினும், அந்த அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு, தான் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கவிருப்பதாக, அரசுத்தலைவர் சாந்தோஸ் அவர்கள் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.