2016-10-07 15:44:00

ஐரோப்பிய ஆயர்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி


அக்.07,2016. ஐரோப்பிய நாடுகளில் வாழும் கத்தோலிக்க மக்களை, கனிவோடும், தொலைதூர நோக்கோடும் வழிநடத்தி வரும் ஐரோப்பிய ஆயர்களை தான் மனதார வாழ்த்துவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

அக்டோபர் 6, இவ்வியாழன் முதல், 9, வருகிற ஞாயிறு முடிய, Monaco நகரில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகளின் நிறையமர்வு கூட்டத்திற்கு, இவ்வமைப்பின் தலைவர், கர்தினால் Péter Erdo அவர்கள் வழியே, திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த உயர் மட்டக் குழுவில் நிலவும் உடன்பிறந்த உணர்வை சிறப்பாகக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

நுரையீரலின் இரு பகுதிகளும் இணைந்து, ஒருவரை வாழவைப்பதுபோல், மேற்கு, கிழக்கு என்ற இருவேறு கலாச்சாரங்களின் விழுமியங்களும் கத்தோலிக்கர்களின் அடிப்படை சக்தியாக அமையவேண்டும் என்று திருத்தந்தை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

'விளிம்புகளை நோக்கிச் செல்லும் திருஅவையாக' ஐரோப்பிய ஒன்றிய தலத்திருஅவை அமையவேண்டும் என்று, அன்னை மரியா, புனிதர்கள் பெனடிக்ட், சிரில் மற்றும் மெதோடியஸ் ஆகியோரின் பரிந்துரை வழியே தான் மன்றாடுவதாக, இவ்வாழ்த்துச் செய்தியின் இறுதியில் கூறியுள்ளார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.