2016-10-06 15:32:00

நம்மை இருள் சூழ்ந்தபோது, பிரிந்துபோனோம் - திருத்தந்தை


அக்.06,2016. "மப்பும் மந்தாரமுமான நாள்" (எசேக்கியேல் 34:12) என்று இறைவாக்கினர் எசேக்கியேல் கூறுவதுபோல், நம்மை இருள் சூழ்ந்தபோது, இறைவனின் மந்தையில் ஒன்றாய் இருந்த நாம், ஒருவரை ஒருவர் சரியாகப் பார்க்க முடியாமல் பிரிந்துபோனோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மாலையில் இடம்பெற்ற வழிபாட்டில் மறையுரை வழங்கினார்.

கத்தோலிக்க, ஆங்கிலிக்கன் ஒன்றிப்பைக் கொண்டாடும் வகையில், உரோம் நகருக்கு வருகை தந்துள்ள கான்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி, மற்றும் ஏனைய ஆங்கிலிக்கன் ஆயர்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஏனைய கத்தோலிக்க ஆயர்களும் இணைந்து, புனித பெரிய கிரகரி பேராலயத்தில் மேற்கொண்ட மாலை வழிபாட்டில், திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

இறைவனின் மந்தை ஒன்று சேரவேண்டும் என்பதே ஆயரான இயேசுவின் விருப்பம் என்று கூறியத் திருத்தந்தை, இந்த மந்தையை வழிநடத்தும் தலைவர்கள் இணைந்து வருவதை இயேசு இன்னும் அதிகம் விரும்புகிறார் என்று எடுத்துரைத்தார்.

கிறிஸ்துவின் குடும்பம் இணைவதும், உலக சமுதாயம் என்ற குடும்பம் இணைவதும் நமக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியப் பணி என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை, மனிதக் குடும்பத்தில், காணாமல் போனவர்கள், காயப்பட்டவர்கள், நலிந்தோர் ஆகியோருக்காகப் பணியாற்றுவதைக் குறித்து இறைவாக்கினர் எசேக்கியேல் கூறியிருப்பது (காண்க. எசேக்கியேல் 34: 16) நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள சவால் என்று சுட்டிக்காட்டினார்.

தன்னைத்தானே காத்துக்கொள்ள முடியாதவண்ணம் துன்புற்ற நம் மேய்ப்பரின் அன்பு, நம் பாவங்களையும், மரணத்தையும் வென்றது என்பதை நம் பணிகளின் வழியே அறிக்கையிடவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகம் காட்டும் மாற்றுப்பாதைகளை விட்டு விலகி, இந்த அன்பில் நம்மையே மீண்டும் மையப்படுத்துவோம் என்று தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.