2016-10-06 15:18:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற மரம், நற்கனிகள் வழங்கிவருகிறது


அக்.06,2016. 50 ஆண்டுகளுக்கு முன், திருத்தந்தை, அருளாளர் 6ம் பவுல் அவர்களும், ஆங்கிலிக்கன் பேராயர் மைக்கிள் இராம்சி (Michael Ramsey) அவர்களும் துவக்கி வைத்த ஒன்றிப்பு முயற்சி என்ற மரம், இன்று வேர்விட்டு, வளர்ந்து, நற்கனிகள் பலவற்றை வழங்கிவருவதை கண்கூடாகக் காண முடிகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஆங்கிலிக்கன் ஆயர்கள் குழுவிடம் கூறினார்.

அருளாளர் 6ம் பவுல் அவர்களும், ஆங்கிலிக்கன் பேராயர் மைக்கிள் இராம்சி அவர்களும் சந்தித்த நிகழ்வின் 50ம் ஆண்டைக் கொண்டாட ஆங்கிலிக்கன் தலைமைப் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களும், இன்னும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து உரோம் நகருக்கு வருகை தந்துள்ள 38 ஆயர்களையும் இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

இந்த ஒன்றிப்பு பயணத்தை எண்ணிப்பார்க்கும் வேளையில், செபம், சாட்சியம், பணிக்கென அனுப்பப்படுதல் என்ற மூன்று கருத்துக்கள் தன் மனதில் தோன்றுவதாகக் கூறியத் திருத்தந்தை, இம்மூன்று கருத்துக்களையும் சுருக்கமாக விளக்கிக் கூறினார்.

இப்புதனன்று நிகழ்ந்த மாலை வழிபாட்டையும், இவ்வியாழன் காலை புனித பேதுரு பசிலிக்காவில் ஆங்கிலிக்கன் ஆயர்கள் மேற்கொண்ட காலை வழிபாட்டையும் நினைவுகூர்ந்தத் திருத்தந்தை, ஒன்றிப்பு வளரவேண்டும் என்ற செபத்தை இணைந்து எழுப்புவதில் நாம் சலிப்படையக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

ஒன்றிப்பின் வழியாக, நாம் குறைந்துவிடப்போவதில்லை மாறாக, வளர்ச்சியடைவோம் என்பதை இவ்வுலகிற்கு பறைசாற்றும் சாட்சிகளாக வாழவேண்டும் என்ற வேண்டுகோளையும் திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.