2016-10-05 16:39:00

மனிதரைப் பிரிக்கும் கருவி அல்ல விளையாட்டு - கர்தினால் இரவாசி


அக்.05,2016. படைப்பாற்றல், கற்பனை, திறமை ஆகிய அனைத்தையும் வளர்க்கக்கூடிய விளையாட்டு, மனித குலத்தைக் கட்டியெழுப்பும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மனித குலத்தைப் பிரிக்கும் கருவியாக அல்ல என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"மனிதகுலத்திற்குப் பணியாற்றும் விளையாட்டு" என்ற தலைப்பில், திருப்பீட கலாச்சார அவை உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் கருத்தரங்கைக் குறித்து, இந்த அவையின் தலைவர், கர்தினால் ஜியான்பிராங்கோ இரவாசி அவர்கள் இச்செவ்வாயன்று  செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

உலகின் பல நாடுகளிலிருந்தும் இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள வருவோர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்திப்பது, இந்த மூன்று நாள் கருத்தரங்கின் துவக்க நிகழ்ச்சியாக, அமையும் என்று, கர்தினால் இரவாசி அவர்கள் எடுத்துரைத்தார்.   

விளையாட்டையும், விசுவாசத்தையும் இணைக்கும்  ஒரு முயற்சியாக, அக்டோபர் 5, இப்புதன் முதல், 7, இவ்வெள்ளி முடிய உரோம் நகரில் அனைத்துலக கருத்தரங்கு ஒன்று, திருஅவை வரலாற்றில், முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முயற்சியில் இணையும் Allianz நிறுவனம், Football for Peace என்ற அமைப்பு, மற்றும் அகில உலக ஒலிம்பிக் கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.