2016-10-05 17:18:00

திருத்தந்தையின் வருகை குறித்து இந்திய கத்தோலிக்கர் மகிழ்ச்சி


அக்.05,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியாவுக்கு வருகை தருவது குறித்து இஞ்ஞாயிறன்று அவர் வெளியிட்டுள்ள விருப்பம், இந்திய கத்தோலிக்க சமுதாயத்தை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று, இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால், Baselios Mar Cleemis அவர்கள் இந்திய ஊடகத்தினரிடம் கூறினார்.

இந்திய ஆயர்கள், கடந்த ஆண்டிலிருந்தே திருத்தந்தையை அழைத்து வந்துள்ளனர் என்றும், தற்போது அவர் தன் விருப்பத்தைத் தெரிவித்திருப்பதால், இனி அதிகாரப்பூர்வ வழிமுறைகளை இந்திய அரசுடன் இணைந்து மேற்கொள்வோம் என்றும் கர்தினால் Cleemis அவர்கள் கூறியுள்ளார்.

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அழைப்பு வத்திக்கானை அடைந்ததும், இரு தரப்பினரும் கலந்துபேசியபின், இந்தப் பயணத்தின் விவரங்கள் வெளியிடப்படும் என்று, கர்தினால் Cleemis அவர்கள் எடுத்துரைத்தார்.

1964ம் ஆண்டு, மும்பை நகரில் இடம்பெற்ற 38வது அகில உலக திருநற்கருணை மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல், இந்தியாவில் காலடி பதித்த முதல் திருத்தந்தை என்றும், அவரைத் தொடர்ந்து, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால், 1986 மற்றும் 1999 ஆகிய இரு ஆண்டுகளில், இந்தியாவுக்கு இருமுறை வந்துள்ளார் என்றும் UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.