2016-10-03 16:03:00

விளிம்பு நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் திருத்தந்தை


அக்.03,2016. ஆயர்களுடன் தான் மேற்கொள்ளும் அத் லிமினா சந்திப்புக்கள், நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் காரணமாக, அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளில் நிகழவேண்டிய சந்திப்புக்கள், 2017ம் ஆண்டில் இடம்பெறும் என்றும், எனவே, தன் திருத்தூதுப் பயணங்கள் குறையும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார்.

அசர்பைஜான் நாட்டில் அக்டோபர் 2 இஞ்ஞாயிறு மாலை தன் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, உரோம் நகருக்கு வரும் வழியில், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியத் திருத்தந்தை, சீனாவுடன் வத்திக்கான் நல்லுறவுகளை உருவாக்கி வருவது குறித்தும், அந்நாட்டிற்குச் செல்ல தனக்கு ஆவல் இருந்தாலும், பயணத் திட்டங்கள் எதுவும் உறுதியாகவில்லை என்றும், தெளிவுபடுத்தினார்.

மிகக் குறைந்த எண்ணிக்கையில் கத்தோலிக்கர் வாழும் அசர்பைஜான் நாட்டிற்குச் திருத்தந்தை சென்றது குறித்து கேள்வி எழுந்தபோது, அல்பேனியா, சரயேவோ, போஸ்னியா, ஹெர்சஸகொவினா, கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவு என, விளிம்புகளில் இருக்கும் நாடுகளுக்கு தான் மேற்கொண்ட பல பயணங்களை, திருத்தந்தை தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஜார்ஜியா நாட்டில் பெற்ற அனுபவம் குறித்து ஒரு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் கலாச்சாரம், கிறிஸ்தவ விசுவாசம் ஆகியவை தான் பெற்ற முதல் ஆச்சரியமான அனுபவம் என்றும், இறைவனின் மனிதராக வாழும் முதுபெரும் தந்தையைச் சந்தித்தது, தான் பெற்ற அடுத்த ஆச்சரியமான அனுபவம் என்றும், விளக்கிக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.