2016-10-03 15:50:00

வாரம் ஓர் அலசல் – விதைப்பதே முளைக்கும்


அக்.03,2016. அன்பு நெஞ்சங்களே, நாம் எதை விதைக்கிறோமோ அதுவே முளைக்கின்றது. நாம் இந்தச் சமூகத்திற்கு எதைக் கொடுக்கின்றோமோ அதையே திரும்பப் பெறுகிறோம்! இது நிதர்சனமான அனுபவ உண்மை. அலுவலகத்தில் சக ஊழியர்களிடம்... வீட்டுப்  பணியாளர்களிடம்... நண்பர்களிடம்... குழந்தைகளிடம்... இப்படி எல்லாரிடமும் நாம் என்ன கொடுக்கிறோமோ, அதையே திரும்பப் பெறுகிறோம். கோபத்தைக் காட்டினால் கோபமும், கல் எறிந்தால் காயமும், மலரைத் தூவினால் மாலையும், அன்பைக் காட்டினால் அதே அன்பும் நமக்குத் திரும்பக் கிடைப்பதை வாழ்வில் நாம் அனுபவித்து வருகிறோம். ஆனால், நம்மில் பலர், தன்னைத் தாண்டி சிந்திப்பது கிடையாது. தான், தான், என்கிற எண்ண ஓட்டத்தில், ஒரு சுயநல வாழ்க்கை வாழுகின்றனர். ஆனால், நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் இன்று செய்வது நன்மையாக இருக்கலாம் அல்லது தீமையாக இருக்கலாம், எது செய்தாலும், அது காலம் கடந்து, அதனதன் தன்மையில், வட்டியோடு நம்மைத் திரும்ப வந்தடையும். ஒரு புதிய நபரை பார்த்து ஒரு சிறிய புன்னகை செய்து பாருங்களேன், அதே புன்னகையை அந்த மனிதரிடமிருந்து நாம் திரும்பப் பெற முடியும். மொத்தத்தில் நாம் வாழும் சமுதாயத்திற்கு நாம் என்ன கொடுக்கிறோமோ அதுவேதான் நமக்குத் திரும்ப வரும்.

இளவயது மருத்துவர் ஒருவர், வாழ்வில் நிறைய பணம் சேர்த்து வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டார். அதனால், தனது வேலை நேரம்போக, வேறு எந்த நேரத்திலும், யார் வந்து சிகிச்சைக்காக அழைத்தாலும் மறுக்காமல் செல்வார். ஒருநாள் காவல்துறை பணியாளர் ஒருவர், இரவில் அந்த மருத்துவர் வீட்டுக் கதவைத் தட்டினார். மருத்துவரும் பாதித் தூக்கத்தில் வந்து கதவைத் திறந்து பார்த்தார். மருத்துவரே, நீங்கள் உடனடியாக என்னோடு வரவேண்டும் என்று சொல்லி அவரை அழைத்துச் சென்றார் அப்பணியாளர். ஒரு பழைய வீட்டு மாடிப்படிகளில் ஏறி இருவரும் சென்றனர். இடமே குப்பையாக இருந்தது. படிகளில் ஏற ஏற, வெடிமருந்து வாடை வீசியது. ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதைப் புரிந்துகொண்டார் மருத்துவர். வீட்டின் மேல்தளத்தை அடைந்த மருத்துவர், அங்கே, ஓர் இளைஞரைப் படுக்க வைத்திருந்ததைப் பார்த்தார். அந்த இளைஞர், தற்கொலைக்கு முயன்று, எப்படியோ உயிர்தப்பி, காயங்களுடன் மயக்கநிலையில் படுத்திருந்தார். மருத்துவர், சிகிச்சையளித்த சிறிது நேரத்தில் கண்விழித்த இளைஞர், ஓவென அழுதார். பின்னர், அவரிடம், அவர்கள் தற்கொலை முயற்சிக்குக் காரணம் கேட்டனர்.

ஐயா, நான் ஒரு கிராமத்து ஏழை. என் குடும்பத்தில் என்னைப் படிக்கவைக்க முடியாமல், பள்ளிப் படிப்போடு, என்னை இங்கு, ஒரு வழக்கறிஞரிடம் வேலைக்குச் சேர்த்துவிட்டனர். வேலை செய்துகொண்டே கல்லூரிப் படிப்பை முடித்தேன். பின்னர் வேறு ஓர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. ஆனால் சேரக்கூடாத ஆட்களோடு சேர்ந்து குதிரைப் பந்தய சூதாட்டத்தில் மாட்டிக்கொண்டேன். கிடைத்த பணத்தையெல்லாம் சூதாட்டத்தில் செலவழித்தேன். தீய பழக்கங்களுக்கு உள்ளானேன். சூதாட்டத்திற்குப் பணம் தேவைப்பட்டது. அதனால் அலுவலகத்தில் பணம் திருடினேன். எப்படியும் இம்முறை பந்தயத்தில் வெற்றி பெற்று பணத்தைக் கட்டிவிடலாம் என்று நம்பினேன். ஆனால் தோற்றுவிட்டேன். அலுவலகத்தில் பிடிபட்டுவிடுவேன் என்று பயந்து, உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தேன், ஆனால் பிழைத்துக் கொண்டேன் என்று கதறினார். ஐயா, நான் திருடியது 7 பவுண்டு, 50 பென்ஸ்தான் என்றார் இளைஞர்.

இந்த இளைஞரின் கதையைக் கேட்ட அந்த காவல்துறை பணியாளர், நான் இந்த இளைஞர்மீது, வழக்குப்பதிவு செய்யப்போவதில்லை என்றார். உடனே அந்த மருத்துவர், இளைஞர் திருடிய பணத்தை உடனடியாகக் கொடுத்து, மறுநாள் அலுவலகத்தில் வைத்துவிடும்படிச் சொன்னார். அந்த வீட்டு முதலாளி அம்மாவும், நான் இந்த மாத வாடகைப் பணத்தைக் கேட்கமாட்டேன் என்றார். அன்பர்களே, இம்மூவரின் இரக்கச் செயல்கள், அந்த இளைஞரின் வாழ்வில் மாற்றத்தைக் கொணர்ந்தன. இது நடந்து இருபத்திரண்டு வருடங்கள் சென்று, ஒருநாள் அந்த மருத்துவரை கப்பல் பயணம் ஒன்றில் சந்தித்தார் அந்த இளைஞர். அவர், மருத்துவர் அருகில் சென்று, ஐயா, என்னை உங்களுக்குத் தெரிகிறதா, நான்தான் அன்று நீங்கள் இலவசமாக, சிகிச்சையளித்ததால் காப்பாற்றப்பட்ட இளைஞன். இப்பொழுது வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். ஏழைகளுக்காக, இலவசமாக வாதாடுகிறேன். நானும் என் மனைவியும், ஓய்வு நேரங்களில், சமூகப்பணி ஆற்றி வருகிறோம் என்று சொன்னார்.

அன்பு நேயர்களே, இது ஓர் உண்மைச் சம்பவம். அந்த மருத்துவர், காவல்துறை பணியாளர், வீட்டு முதலாளி ஆகிய மூவரும் செய்த உதவிகளுக்குப் பலன் கிடைத்துள்ளது. அவர்கள் எதைக் கொடுத்தார்களோ, அதையே பன்மடங்காகத் திரும்பப் பெற்றார்கள். பேரரசர் அக்பர், அமைச்சர் பீர்பால் கதை நமக்குப் புதிதல்ல. ஒருநாள் அக்பர்,  பீர்பாலிடம், நாம் ஒன்றை மற்றவருக்கு கொடுத்தால், அதுவே நமக்குத் திரும்ப வரும் என்பது உண்மையா? என்று கேட்டார். அதற்கு பீர்பாலும், ஆம் அரசே, நாம் செய்வது நன்மையோ, தீமையோ எதுவானாலும், அது திரும்ப நமக்கே வரும் என்றார். அப்படியா, பக்கத்தில் வா என்று பீர்பாலை அழைத்து, அவரது கன்னத்தில் ஓங்கி ஓர் அடி கொடுத்துவிட்டு, நீ கூறுவது உண்மையானால், இன்று இரவிற்குள், இந்த அடி எனக்குத் திரும்ப கிடைக்கவேண்டும் என்று சொல்லிச் சென்றார் அக்பர். உடனே வீட்டுக்குச் சென்ற பீர்பால், தனது மனைவியின் கன்னத்தில் அடித்தார். பிறகு பீர்பால் தனது மனைவியைப் பார்த்து, இன்று ஒரு கனவு கண்டேன் அதில் கடவுள் தோன்றி உனக்கு மிகவும் பிடித்தவர்க்கு ஓர் அடி கொடுக்கச் சொன்னார். எனக்கு உன்னைத்தான் மிகவும் பிடிக்கும் அதனால்தான் உன்னை அடித்தேன் என்று நியாயம் சொன்னார். அதேபோல், அவரது மனைவியும், உடனடியாகத் தனது தோழியின் கன்னத்தில் அடித்து, பீர்பால் கூறியதுபோல் சொன்னார். இவ்வாறு ஒருவர் ஒருவரை அடிப்பதை ஒரு விளையாட்டாக எல்லாரும் செய்தனர். இரவு அரசர் வந்ததும், ராணியும் அரசரது கன்னத்தில் ஓங்கி அடித்தார். அரசருக்கு அதிர்ச்சி. அதற்கு ராணி, நமது நாட்டில் ஒரு விளையாட்டு துவங்கி இருக்கிறது. அதன்படி நமக்கு யாரை மிகவும் பிடிக்குமோ அவரது கன்னத்தில் ஓர் அடி கொடுக்க வேண்டுமாம் என்று கூறினார். அப்போது அரசர் அக்பருக்கு, தான் பீர்பாலிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. 

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மதுரையில், சுற்றுலாத் தலமான தெப்பக்குளத்தின் பக்கம் ஒரு பேருந்தில் இளம்பெண் ஒருவர் வந்திறங்கினார். பின்னர், அவர், தனது கையில் வைத்திருந்த ஒரு பெரிய பையில், அந்தப் பகுதியில் கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக்கூளங்களைப் பொறுக்க ஆரம்பித்தார். பை நிரம்பியதும், அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் கொண்டுபோய் பொறுக்கிய குப்பையைப் போட்டுவிட்டு அடுத்த இடத்தில் உள்ள குப்பையை அள்ளப் போனார். இப்படியே அங்குள்ள பல பகுதிகளில் உள்ள குப்பைகளை அள்ளி சுத்தம் செய்துவிட்டு நிமிர்ந்தார். பின்னர், அடுத்த பேருந்தில் ஏறி அங்கிருந்து கிளம்பி அடுத்த சுற்றுலாத் தலமான திருமலை நாயக்கர் மஹால் பகுதிக்குச் சென்றார். அங்கும் அவர் அப்படியே செய்தார். இப்படி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், மதுரையில் இந்தச் சமூகப்பணியைச் செய்து வருகிறார் அந்த இளம்பெண்.

அன்பர்களே, மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த சத்யா என்கின்ற சத்யாஸ்ரீதான் அந்த இளம்பெண். இவரது தாய் அப்பளக் கம்பெனியில் வேலை பார்த்து மகள் சத்யாவை மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்திருக்கிறார். நல்ல உணவோ, நல்ல ஆடைகளோ கிடையாது, தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடியதும் கிடையாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி, படிப்பிற்குத் தேவையான பணத்தை அப்பள கம்பெனியில் பகுதி நேரம் வேலை பார்த்து சம்பாதித்துக்கொண்டார் சத்யா. இப்படியே நல்ல மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டயமும் பெற்றார். 23 வயதில் ஒரு பள்ளியின் முதல்வர் ஆனார். பள்ளியை பல மடங்கு உயர்த்திக் காட்டினார். இதன் காரணமாக மாவட்ட ஆட்சித்தலைவர் துவங்கி மாநிலத் தலைமைவரை, பலரிடம் சான்றிதழ் பெற்றார் சத்யா. இந்தச் சான்றிதழ், தகுதி, திறமை காரணமாக, வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான ஊதியத்தில் வேலை வாய்ப்புகள் வந்தன. கல்விதான் ஒருவரை உயர்த்தும் என்பது சத்யாவின் மனஓட்டம். ஆகவே அனைவருக்கும் கல்வி என்ற இலட்சியத்திற்கு துணை நிற்பது என்று முடிவு செய்தார். பள்ளி, கல்லுாரி விழாக்களில், கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசி வருகிறார். கல்வியைப் பாதியில் விட்டவர்களைத் தேடிப்பிடித்து படிப்பை தொடரச் செய்கிறார். கல்லுாரியில் படித்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு பாதியில் திருமணம் செய்வதைத் தடுத்து நிறுத்தி, முழுமையாகப் படிக்க வைப்பதில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக, நகரம், கிராமம் என்று, பயணம் மேற்கொள்கிறார். தனது இந்தக் கல்வி விழிப்புணர்வு சேவைக்காக, தான் செய்துகொண்டிருந்த முழுநேர கார்ப்பரேட் வேலையை, பகுதி நேர வேலையாக மாற்றிக்கொண்டார். வறுமை வாட்டியபோது எப்படி இருவேளை சாதாரண உணவும், சாதாரண உடையும் கொண்டிருந்தாரோ, அதே நிலையைத்தான் இப்போதும் தொடர்கிறார் சத்யா. பணத்தை ஒரு காலத்திலும் பொருட்டாக அவர் மதித்ததே இல்லை. கல்வி தொடர்பாக யார் வந்து எந்த உதவி கேட்டாலும் முடிந்தவரை இவர் உதவுகிறார். பசியின் கொடுமை தெரியும் என்பதால், யாராவது பசி என்றால், கையிலிருக்கும், பையிலிருக்கும் பணத்தை எல்லாம் சாப்பாடாக வாங்கிக் கொடுத்துவிடும் குணம் கொண்டவர் இவர். பேருந்துக்கு வைத்திருந்த பணத்தைக்கூட கொடுத்துவிட்டு, நடந்து வந்த நாட்கள் பல உண்டு என்று, தினமலர் இ-தாளில் சத்யா பற்றி வாசித்தோம்.

அன்பர்களே, சத்யஸ்ரீ அவர்களின் சமுதாய அக்கறை, அவர்மீது பலரின் பார்வையைத் திருப்பியுள்ளது. நாம் மற்றவர்களுக்கு எதைச் செய்கிறோமோ அதுவே நமக்குத் திரும்பி வரும். இன்று நாம் செய்வது, நாளை நமக்கேத் திரும்ப வரும். எனவே நல்லதை நினைத்து, நல்லது செய்து. நல்லதைப் பெறுவோம். அக்டோபர் 05, வருகிற புதன், உலக ஆசிரியர்கள் தினம். நல்லனவே போதிக்கும் ஆசிரியப் பெருமக்களை வாழ்த்துவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.