2016-10-03 15:57:00

திருத்தந்தையின் பயணங்களில், இந்தியாவும், பங்களாதேஷும்


அக்.03,2016. தனது அடுத்த திருத்தூதுப் பயணங்களில், இந்தியாவும், பங்களாதேஷும் இடம்பெறும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

செப்டம்பர் 30ம் தேதி முதல், அக்டோபர் 2ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜார்ஜியா, அசர்பைஜான் நாடுகளில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, உரோம் நகருக்கு வரும் வழியில், தன்னுடன் விமானத்தில் பயணித்த செய்தியாளர்களிடம் தன் அடுத்த பயணங்களைக் குறித்து பேசினார்.

1917ம் ஆண்டு, பாத்திமா நகரில் அன்னை மரியா தோன்றியதன் நூற்றாண்டு நிறைவு, 2017ம் ஆண்டு கொண்டாடாடப்படுவதையொட்டி, மே மாதம் 12, 13 தேதிகளில் போர்த்துகல் நாட்டின் பாத்திமா நகருக்கு தான் செல்லவிருப்பதாகக் கூறியத் திருத்தந்தை, அதைத் தொடர்ந்து, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளுக்குச் செல்லவிருப்பதாகவும், சூழ்நிலை இடம்கொடுத்தால், ஆப்ரிக்காவுக்குச் செல்லவிருப்பதாகவும் கூறினார்.

தென் கொரியா, இலங்கை, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளையடுத்து, திருத்தந்தை பயணம் மேற்கொள்ளும் ஆசிய நாடுகள், இந்தியா மற்றும் பங்களாதேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜார்ஜியா, அசர்பைஜான் நாடுகளுக்குச் செல்வதற்கு முன்னர், தான் பிறந்து வளர்ந்த நாடான ஆர்ஜென்டீனாவுக்கு அனுப்பிய ஒரு காணொளிச் செய்தியில், தன்னால் அடுத்த ஆண்டு அந்நாட்டிற்கு வர முடியாத நிலையைக் குறித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.