2016-10-03 15:19:00

இது இரக்கத்தின் காலம் : நம்மைக் கடவுள் தேடி வரும் நேரம்


குடிமகன் ஒருவன், தனது அரசரை நேரில் சென்று பார்ப்பதற்கு வெகு நாள்களாக ஆசைப்பட்டான். ஏனென்றால், அரசரிடம் நெருங்கிச் சென்று பேசுவது எளிதான விடயம் இல்லை என்பதை அக்குடிமகன் நன்றாக அறிந்திருந்தான். அதனால் அவன், தனது ஆவலை நிறைவேற்றுவதற்கு ஒரு யுக்தியைக் கையாண்டான். அவன், தன் நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் பயன்பெறும்படியாக உழைத்தான். பல அறச் செயல்கள் செய்தான். தன் சுற்றத்தாரையும் நண்பர்களையும் வைத்துக்கொண்டு, ஊருக்காக ஒரு குளம் வெட்டித் தந்தான். இப்படி அவன் செய்து வந்த நற்செயல்கள் எல்லாம் அரசர் செவிக்கு எட்டின. எனவே அரசர், அந்தக் குடிமகனை நேரில் சந்திக்க விரும்பினார். தனது காவலர்களின் உதவியுடன், அரசரே நேரில் சென்று, அவனைச் சந்தித்து, அவனோடு உரையாடி, பாராட்டிப் பரிசளித்துவிட்டு வந்தார். அன்பர்களே, இறைவனை அடைவதற்கான வழியைப் போதிக்கும்படி கேட்டுக்கொண்ட தன் சீடரிடம் இக்கதையைக் கூறிய குருநாதர் ஒருவர்,  சற்று இடைவெளிவிட்டு, மேலும் தொடர்ந்தார். “இப்போது அந்த அரசர்தான் இறைவன். நீதான் அந்தக் குடிமகன். அரசரை நேரில் சென்று பார்ப்பதற்கு வெறும் ஆசையை வளர்த்துக்கொண்டால் மட்டும் போதாது. ஆனால், உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும், அப்போது, அந்த அரசரே உன்னைப் பார்க்க வருவார்’என்றார் குருநாதர். ஆம். நமது எண்ணங்களும், சொற்களும், செயல்களும், நம் அயலவருக்கு நல்லது செய்யும் எனில், இறைவனே நம்மைத் தேடி வருவார். மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்றார் இயேசு(மத்.25,40).

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.