2016-10-03 16:26:00

அருள்பணி Hamel கொல்லப்பட்ட ஆலயம் மீண்டும் அர்ச்சிப்பு


அக்.03,2016. பிரான்ஸ் நாட்டில், ஜூலை 26ம் தேதி அருள்பணி Jacques Hamel அவர்கள், திருப்பலி நிறைவேற்றிய வேளையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மூடிவைக்கப்பட்டிருந்த ஆலயம், மக்களின் வழிபாட்டுக்கென, அக்டோபர் 2, இஞ்ஞாயிறு பிற்பகல் மீண்டும் திறக்கப்பட்டது.

St Etienne-du-Rouvray என்றழைக்கப்படும் இவ்வாலயத்தில் அடிப்படைவாதிகளால் நிகழ்த்தப்பட்டக் கொலையைத் தொடர்ந்து, மூடப்பட்டிருந்த ஆலயத்தை, Rouen பேராயர், Dominic Lebrun அவர்கள் மீண்டும் அர்ச்சித்து, திருப்பலி நிறைவேற்றினார்.

அருள்பணி Hamel அவர்களை அருளாளராக உயர்த்துவதற்குத் தேவையான வழிமுறைகளைத் துவக்கலாம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார் என்று, பேராயர் Lebrun அவர்கள், அறிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசர்பைஜான் நாட்டிலிருந்து திரும்பி வரும் வழியில், விமானப் பயணத்தில் பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த வழிமுறையைக் குறித்து தான் கர்தினால் ஆஞ்சலோ ஆமாத்தோ அவர்களிடம் கலந்து பேசியிருப்பதாகவும், இந்த வழிமுறைகள் இன்னும் துவங்கவில்லை என்றும் எடுத்துரைத்தார்.

அருள்பணி Hamel அவர்கள் பணியாற்றிய ஆலயத்தை மீண்டும் திறந்து வைத்த இத்திருப்பலியில், பல இஸ்லாமிய சகோதரர்களும் பங்கேற்றனர் என்று, ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.