2016-10-02 15:50:00

அசர்பைஜான் பல்சமயத் தலைவர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


அக்.02,2016. மதத் தலைவர்களே, அன்பு நண்பர்களே, உடன்பிறந்த உணர்வுடன் இந்த வழிபாட்டுத் தலத்தில் நாம் சந்திப்பது, சக்திமிக்க ஓர் அடையாளமாக விளங்குகிறது. அசர்பைஜான் நாட்டில் வாழும் கத்தோலிக்கச் சமுதாயம் தேவையில் இருந்தபோது, இஸ்லாமியத் தலைவர்கள் வழங்கிய உதவிகள், இந்நாட்டில் நிலவும் நல்லுறவுக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக உள்ளன. உரையாடலையும், பன்முகக் கலாச்சாரத்தையும் வளர்க்க, அசர்பைஜான் நாடு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு, இந்தச் சந்திப்பு மற்றுமோர் எடுத்துக்காட்டு.

மக்களைப் பிரிப்பதில் குறியாய் இருப்பவர்கள், இங்கு நிலவும் நல்லுறவை விரும்பமாட்டார்கள். ஆனால், மக்கள் இணைந்து வருவதை, இரக்கமே உருவான இறைவன் அதிகம் விரும்புகிறார்.

"நீர் ஒரு மனிதர் என்றால், மற்ற மனிதர்களுடன் இணைந்து கொள்வீர், ஏனெனில், மக்கள், ஒருவர் ஒருவரோடு இணைவதே மேல்" என்று உங்கள் நாட்டுக் கவிஞர் ஒருவர் (Nizami Ganjavi) கூறியுள்ளார். மற்றவரை திறந்த மனதோடு அணுகுவது, நம்மை இன்னும் செறிவு மிக்கவர்களாக மாற்றும்.

வாழ்வின் முழுப்பொருளைத் தேடும் மனிதர்களுடன் இணைந்து செல்வது, மதங்களின் முக்கியமானக் கடமை. ஒவ்வொரு மனிதரின் மையமும், அவருக்கு வெளியே உள்ளதென்பதை உணர்த்துவது, மதங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு. ஒவ்வொரு மனிதரின் உன்னதத்தை வெளிக்கொணர்வது, மதங்கள் மேற்கொள்ளவேண்டிய கல்விப்பணி.

ஒருவர் ஒருவர் மீது கொள்ளும் மதிப்பு, சந்திப்பு, பகிர்வு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு, உண்மை அமைதி கட்டியெழுப்பப்பட வேண்டும். இந்த அமைதியைக் கட்டியெழுப்புவதில் நாம் காலதாமதம் செய்ய இயலாது.

விலைமதிப்பற்ற கருவூலங்களைக் கொண்டுள்ள இந்நாட்டை, இறைவன் தன் ஆசீரால் நிரப்புவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.