2016-10-02 11:07:00

அசர்பைஜான் அமலஅன்னை ஆலயத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


அக்.02,2016. இன்றைய இறை வார்த்தை, கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கியமான அம்சங்களான நம்பிக்கை, பணிவிடை செய்தல் ஆகியவற்றை வழங்குகிறது. நம்பிக்கையைக் குறித்து ஆண்டவரிடம் இரு குறிப்பிட்ட விண்ணப்பங்கள் எழுப்பப்படுகின்றன.

வன்முறையாலும், வாதங்களாலும் நொறுக்கப்பட்டுள்ள நீதியையும், அமைதியையும் திரும்ப நிலைநாட்ட, இறைவாக்கினர் அபக்கூக்கு இறைவனை இறைஞ்சுகிறார்: ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? (அபக்கூக்கு 1:2)

இதற்கு பதில் சொல்லும் இறைவன், தன் வல்லமையால் அனைத்தையும் சீராக்குவதாகக் கூறவில்லை. மாறாக, நம்பிக்கை இழக்காமல், பொறுமையாகக் காத்திருக்குமாறு அழைக்கிறார். (காண்க. அபக். 2:4). நம் உள்ளங்களை மாற்றுவதன் வழியாக, இறைவன் இவ்வுலகை மாற்றுகிறார். நம்பிக்கை கொள்ளும் திறந்த உள்ளத்தை இறைவன் காணும்போது, அங்கு, அவரால் புதுமைகள் ஆற்றமுடியும். நம்மிடமிருந்து துவங்கி, இவ்வுலகில் நிகழும் மாற்றத்திற்கு, இறைவன் மீது நாம் கொள்ளும் நம்பிக்கை அவசியம். (1 யோவான் 5:4)

துடிப்புள்ள இந்த நம்பிக்கை எளிதல்ல. இது நம்மை இரண்டாவது விண்ணப்பத்திற்குக் கொணர்கிறது. "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்" (லூக்கா 17:5) என்று திருத்தூதர்கள் இயேசுவிடம் விண்ணப்பிக்கின்றனர். நம்பிக்கை என்பது இறைவனின் கோடை என்றாலும், அதை போற்றி வளர்ப்பது, நம் பொறுப்பு. நம்பிக்கை என்பது, நம்மை இறைவனோடு எல்லா நேரங்களிலும் பிணைக்கும் ஒரு தங்கக்கயிறு. இது நம் வாழ்வு முழுவதும் நம்மோடு இருப்பது, ஆனால், இது பலன் தரவேண்டுமெனில், நம் பங்கு அவசியம்.

நம்முடைய பங்கு என்ன? பணிவிடை செய்வதே நம் பங்கு என்று இயேசு சொல்லித் தருகிறார். இன்றைய நற்செய்தியில், அவர் நம்பிக்கையைப் பற்றி பேசியதும், உடனே, பணிவிடை செய்வதைப் பற்றிப் பேசுகிறார். நம்பிக்கையும், பணிவிடையும் பிரிக்கமுடியாதவாறு இணைக்கப்பட்டவை.

நாம் பயன்படுத்தும் கம்பளம், இந்த இணைப்பைப் புரிந்துகொள்ள உதவும். இரு திசைகளில் உள்ள இழைகள் இணையும்போது, அழகிய கம்பளங்கள் நெய்யப்படுகின்றன. அதேபோல், நம்பிக்கையும், பணிவிடை செய்வதும் இணையும்போது, வாழ்வு என்ற அழகான கம்பளம் உருவாகின்றது.

பணிவிடை செய்வது என்றால் என்ன? நம் கடமைகளைச் சரிவர நிறைவேற்றி, நற்செயல்களை ஆற்றுவதே பணிவிடை என்று எண்ணுகிறோம். இன்றைய நற்செய்தியில், இயேசு, இன்னும் முழுமையாகப் பணிவிடை செய்வது குறித்துப் பேசுகிறார். எவ்விதக் கணக்கும் பார்க்காமல் பணியாற்றுவதைப் பற்றிப் பேசுகிறார்.

அவரும் தன் வாழ்வில், முழுமையாக, இறுதி மூச்சுவரை பணிவிடை செய்தவர். அத்தகையப் பணிக்கு நம்மையும் அழைக்கிறார். சன்மானங்களையும், வெகுமதிகளையும் எதிர்பார்த்து செய்யப்படும் ஒரு செயலாக இல்லாமல், பணிவிடை என்பது நம் வாழ்வாகவே மாறவேண்டும் என்று இயேசு நம்மிடம் கேட்கிறார்.

பணிவிடை செய்வதிலிருந்து நம்மைத் திசை திருப்ப இரு சோதனைகள் எழுகின்றன. உள்ளங்களில் ஆர்வம் ஏதுமின்றி பணியாற்றுவது, முதல் சோதனை. ஆர்வமில்லாத உள்ளங்கள், இறைவனுக்கும் அடுத்தவருக்கும் ஆற்றும் பணிகளை அளந்து செய்கின்றன. பலனை, பரிசை எதிர்பார்த்து பணியாற்றும் இந்த உள்ளங்கள் திருப்தி அடைவதில்லை.

"அதிகம் செயலாற்றுவது" என்பது, நமக்கு வரும் இரண்டாவது சோதனை. மற்றவர்கள் நம்மைப்பற்றி நல்ல எண்ணங்கள் கொள்ளவேண்டும், அதனால், நாம் முக்கியத்துவம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்படும் பணிவிடை இது.

கம்பளம் என்ற உருவகத்திற்குத் திரும்புவோம். இதனை, நம் குழுமங்களுக்கு ஓர் அழகிய எடுத்துக்காட்டாகக் காணலாம். நாம் ஒவ்வொருவரும் அழகான நூல் இழைகள். அனைவரும் இணைந்து நெய்யப்படும்போதுதான், அழகிய கம்பளமாக உருவாகிறோம்.

மாசற்ற அமல அன்னை, மற்றும் புனிதர்களின் பரிந்துரையை நாம் நாடுவோம். குறிப்பாக, நம்பிக்கையையும் பணிவிடையையும் தன் வாழ்வாக்கிய புனித அன்னை தெரேசாவின் பரிந்துரையை நாடுவோம். அவர் சொன்ன சில சொற்கள், நமது இன்றைய எண்ணங்களை சுருக்கமாகக் கூறுகின்றன: "நம்பிக்கையின் கனி, அன்பு. அன்பின் கனி, பணிவிடை. பணிவிடையின் கனி, அமைதி." (ஓர் எளிய வழி, முன்னுரை - A Simple Path, Introduction)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.