2016-10-01 15:08:00

திபிலிசி மரியின் விண்ணேற்பு ஆலயத்தில் நால்வரின் பகிர்வுகள்


அக்.01,2016. ஜார்ஜியாவிலுள்ள அர்மேனிய கத்தோலிக்கரின் விசுவாச வாழ்வு பற்றி, அருள்பணியாளர், திருத்தந்தையிடம் எடுத்துக் கூறி, திருத்தந்தையின் வருகைக்கு நன்றி தெரிவித்தார். Kote  என தன்னை அறிமுகப்படுத்திப் பேசிய குருத்துவ மாணவர், தனக்கு இறையழைத்தல் ஏற்பட்ட விதம் பற்றித் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வில் சாட்சியம் வழங்கிய தாய் இரினா, தனது கணவரும், இரு பிள்ளைகளும் கத்தோலிக்க விசுவாசத்தை கடைப்பிடித்து வரும் விதம் பற்றிப் பகிர்ந்து கொண்டார். ஜார்ஜியாவிலுள்ள குடும்பங்கள் மரபுவழி விழுமியங்களைப் பின்பற்றினாலும், இக்காலத்தில் உலகளவில் காணப்படும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. ஆயினும், கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் குடும்பங்களை அமைப்பதற்கு உதவி வருவதாகத் திருத்தந்தையிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பேசிய இளைஞர், தனது பெயர் Kakha எனலும், தான் 23 வயதுடையவர் எனவும் முதலில் அறிமுகப்படுத்தினார். உலகில், துன்பம் நிறைந்த சூழல்களில், எண்ணற்ற இளையோர் வாழ்வதை ஜார்ஜிய இளையோராகிய நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்களும், பல முறைகள் தனிமையை உணர்கிறோம். எனினும், புரிந்துகொள்ளாத்தன்மை என்ற சுவரைத் தகர்த்து முன்னோக்கிச் செல்ல முயற்சிக்கிறோம். திருத்தந்தையே, உமது பிரசன்னம் எங்களுக்கு வலிமையைக் கொடுக்கின்றது. உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையின் ஓர் அங்கம் என்பதை உணரவும், எங்களின் கத்தோலிக்க தனித்துவத்தை வலுப்படுத்தவும், திருத்தந்தையே, உமது வருகை எமக்கு உதவுகின்றது. நாங்கள், திருஅவையின் பிள்ளைகளாக, அச்சமின்றி உறுதியுடன் நடக்க விரும்புகின்றோம் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.