2016-10-01 15:38:00

தலைமைப் பேராலயத்தில் திருத்தந்தை வழங்கிய இறுதி உரை


அக்.01,2016. முதுபெரும் தந்தையே, பிரதமரே, அரசு அதிகாரிகளே, சகோதர ஆயர்களே, அருள்பணியாளர்களே, சகோதர, சகோதரிகளே,

ஜார்ஜியா நாட்டிற்கு நான் மேற்கொண்ட திருப்பயணத்தின் இறுதியில், என் உள்ளம் நன்றியால் நிறைந்துள்ளது. இந்த அனுபவத்தை எண்ணும்போது, திருப்பாடல் ஆசிரியர் கூறிய சொற்கள் நினைவுக்கு வருகின்றன: “சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது! அது ஆரோனின் தலையினிலே ஊற்றப்பெற்ற நறுமணத்தைலத்திற்கு ஒப்பாகும்.” (தி.பா. 133: 1-2)

உடன்பிறந்த உணர்வு, நட்பு, மக்களிடையே நெருக்கம் போன்ற பொருள் செறிந்த வார்த்தைகள், ஜார்ஜியா நாட்டின் மொழியில் காணப்படுகின்றன. அவற்றில், "உங்கள் இடத்தில் நான் இருக்க விழைகிறேன்" என்ற பொருள்தரும், shen genatsvale என்ற சொற்றொடர், மிக அழகானது. மற்றவர்களோடு இணைந்து, மகிழ்வையும், துயரங்களையும் பகிர்ந்து வாழ்தல் என்ற உணர்வு, நம் இணைந்த பயணத்தில் உடன்வரட்டும்.

ஜார்ஜியா நாட்டின் விசுவாசம், வரலாறு என்ற உயர்ந்த கருவூலங்கள் பல இந்தப் பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஜார்ஜியா நாட்டின் வரலாற்றில், ஒவ்வொரு பக்கமும் கிறிஸ்தவ விழுமியங்களால் எழுதப்பட்டுள்ளது. இந்நாட்டின் வரலாற்றில் பல நேரங்கள், துயரத்தால் சூழப்பட்டிருந்தன. எனினும், இறைவன் அன்புக்குரிய ஜார்ஜியா நாட்டை ஒருபோதும் கைவிடவில்லை; ஏனெனில், “உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.

தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்.” (தி.பா. 145: 13-14)

இறைவனின் இரக்கம் மிகுந்த அருகாமை, புனித அங்கி என்ற அடையாளத்தால் காட்டப்படுகிறது. "மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்த" (யோவான் 19: 23) அந்த அங்கியின் இரகசியம், துவக்கத்திலிருந்து கிறிஸ்தவர்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. தையலே இல்லாத இந்த அங்கி, கிறிஸ்தவர்களின் ஒற்றுமையைக் குறிக்கிறது என்று கார்த்தேஜ் நகர் புனித சிப்ரியன் கூறியுள்ளார்.

ஒற்றுமையைக் குறிக்கும் இந்த அங்கி, நம்மிடையே நிலவிவரும் பிரிவுகள் குறித்து ஆழ்ந்த வருத்தம் கொள்ள நமக்குச் சொல்லித் தருகிறது. 

கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, பொறுமையாக, தாழ்ச்சியாக எழுப்பப்பட வேண்டும். நம்மிடையே நிலவிவரும் வேறுபாடுகளை நீக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், வரலாறு நமக்குத் தரும் வாய்ப்புக்களை பயன்படுத்தவேண்டும்.

நம்மிடம் உள்ள குறைபாடுகளையும், வரலாற்று வேற்றுமைகளையும் தாண்டி, ஒன்றிணைய நாம் அழைக்கப்பட்டுள்ளோம். திருமுழுக்கு பெற்ற நம் மத்தியில் பிரிக்கும் சக்திகளைவிட, இணைக்கும் அம்சங்கள் அதிகம் உள்ளன. 

ஜார்ஜியா நாட்டு மொழியில், 'கல்வி' என்ற சொல், 'திருமுழுக்கு' என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவானது என்பது, அழகான ஒரு கருத்து. இந்த தலைமைப்பேராலயத்தில், பல சகோதர, சகோதரிகள் திருமுழுக்குப் பெறுகின்றனர். திருமுழுக்கால் இணைந்துள்ள நாம் அனைவரும், அந்த இணைப்பை இன்னும் பலப்படுத்துவோம். நம் அனைவருக்கும் இறைவன் வழங்கியுள்ள கொடைகளைப் பகிர்ந்துகொள்வோம்.

அனைத்தையும் புதியனவாக்கும் (காண்க. திருவெளிப்பாடு  21:5) இறைவன், உடன்பிறந்த திருத்தூதர்களான பேதுரு, அந்திரேயா ஆகியோரின் பரிந்துரையோடு, கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரையும் இணைத்து, வழி நடத்துவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.