2016-10-01 15:00:00

ஜார்ஜியாவில் திருத்தந்தையின் 2வது நாள் நிகழ்வுகள்


அக்.01,2016. மிகச் சிறிய விதை மிகப்பெரிய பலன் தரும் என்பதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாய் விளங்குவது ஆலமரம். இதேபோல், தனது ஆன்மீக வாழ்வில், சிறிய, எளிய வழிகளைக் கடைப்பிடித்து, உலகோர் போற்றும் புனிதையாக, மறைபரப்பும் நாடுகளின் பாதுகாவலராகத் திகழ்பவர் குழந்தை இயேசுவின் புனித தெரேசா. இப்புனிதர், சிறிய வழியே, இறையாட்சியின் நுழைவாயில் என்பதை தம் வாழ்வால் உணர்த்தியவர். அக்டோபர் 01, இச்சனிக்கிழமை இப்புனிதரின் திருவிழா. இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம், முற்பகல் 11 மணிக்கு, ஜார்ஜிய நாட்டுத் தலைநகர் திபிலிசியில், தனது இரண்டாவது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தை இயேசுவின் புனித தெரேசாவின் சிறிய வழியையே தனது டுவிட்டரிலும், தனது மறையுரையிலும் நினைவுபடுத்தினார். “இறைவன், உயரிய எண்ணங்கள் மற்றும், மிகுந்த படிப்பால் அறியப்படுவதில்லை, ஆனால், நம்பிக்கை வைக்கும் இதயத்தின் எளிமையில் அறியப்படுகிறார்” என்பது, இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தையின் டுவிட்டரில் வெளியாயின. மேலும், ஜார்ஜியத் தலைநகர் திபிலிசியில், Mikheil Meskhi விளையாட்டு அரங்கத்தில் இச்சனிக்கிழமை காலையில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையிலும், குழந்தை இயேசுவின் புனித தெரேசாவின் சிறிய வழியைப் பின்பற்றுமாறு ஜார்ஜிய கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டார். தன் தந்தையின் கரங்களில் அச்சமின்றி உறங்கும் சிறு குழந்தையின் நம்பிக்கையே, இப்புனிதர், இறைவன்மீது வைத்திருந்த நம்பிக்கை என்று கூறினார்.

பெரும்பான்மையான ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களைக் கொண்டிருக்கும் ஜார்ஜியாவில் ஒரு இலட்சத்து 12 ஆயிரம் பேர், அதாவது, அந்நாட்டின் மக்கள் தொகையில் 3 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் கத்தோலிக்கர். ஆனாலும், ஏறத்தாழ ஏழாயிரம் கத்தோலிக்கர் கலந்துகொண்ட இத்திருப்பலியில், அர்மேனிய அப்போஸ்தலிக்க சபை, ஆர்த்தடாக்ஸ் சபை, கல்தேய மற்றும் சீரோ மலங்கரா வழிபாட்டு முறையினர் என, பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஆயினும், ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் சபையின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகள் குழு கலந்துகொள்ளவில்லை. இத்திருப்பலியின் இறுதி ஆசீருக்கு முன்னதாக, ஜார்ஜியாவின் இலத்தீன், அர்மேனிய மற்றும் சீரோ கல்தேய கத்தோலிக்க வழிபாட்டு முறைகளின் நிர்வாகியாகிய பேரருள்திரு Pasotto அவர்கள், அச்சபைகளின் சார்பாக, திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். திருத்தந்தையும், இத்திருப்பலியின் இறுதியில், அச்சபைகளின் பிரதிநிதிகளை வாழ்த்தினார். இத்திருப்பலியில் கலந்து கொண்ட கல்தேய வழிபாட்டு முறையின் முதுபெரும் தந்தை சாக்கோ, கல்தேய ஆயர்கள், அண்டை நாடான அர்மேனியாவிலிருந்து வந்திருந்த விசுவாசிகள், ஜார்ஜிய அரசுத்தலைவர், அதிகாரிகள், அர்மேனியா அப்போஸ்தலிக்க சபையின் அன்புக்குரிய நண்பர்கள், அனைத்து கிறிஸ்தவ சமூகங்கள், குறிப்பாக, ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் சபையின் விசுவாசிகள் ஆகிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி. பேரருள்திரு Pasotto அவர்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எனக்காகச் செபிக்குமாறு கேட்கிறேன். உங்கள் அனைவருக்காகவும் நானும் செபிக்கிறேன் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் எனது நன்றிகள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், இந்த Mikheil Meskhi அரங்கத்திலிருந்து, 5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவும் அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். சிறிது நேரம் ஓய்வும் எடுத்தார். இச்சனிக்கிழமை, உள்ளூர் நேரம் மாலை 3.30 மணிக்கு, திபிலிசி நகரில் மீண்டும் தனது பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஜார்ஜியத் திருப்பீடத் தூதரத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மரியின் விண்ணேற்பு ஆலயத்திற்குச் சென்ற திருத்தந்தை, அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் குருத்துவ மாணவர்களைச் சந்தித்தார். ஜார்ஜியாவிலுள்ள, இந்த இலத்தீன் வழிபாட்டு முறை ஆலயம், 20ம் நூற்றாண்டில், திருப்பீடத்தின் உதவியுடன், கப்புச்சின் துறவு சபை அருள்பணியாளர்களால் கட்டப்பட்டது. இந்நிகழ்வில், முதலில், பேரருள்திரு Pasotto அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர், ஓர் அருள்பணியாளர், ஒரு குருத்துவ மாணவர், ஒரு தாய், ஓர் இளைஞர் என, நான்கு பேர் சாட்சியம் வழங்கி, திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நால்வரின் சாட்சியங்களைக் கேட்ட பின்னர், இச்சந்திப்பில் உரையாற்றுவதற்கென தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல், அப்போது, தனது எண்ணத்தில் எழுந்தவைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பை நிறைவு செய்து, அந்த ஆலயத்திற்கு பரிசுப் பொருள் ஒன்றையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இதற்குப் பின்னர், ஜார்ஜிய கத்தோலிக்கத் திருஅவையின் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பின் பணியாளர்கள் மற்றும் உதவி பெறுபவர்களை, காரித்தாஸ் மையத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கமிலியன் துறவு சபை அருள்பணியாளர்களும் அந்நாட்டில் இப்பணியை ஆற்றி வருகின்றனர். எனவே, இச்சபை நடத்தும் பிறரன்பு மைய இயக்குனர், காரித்தாஸ் இயக்குனர் ஆகிய இருவரும் திருத்தந்தையை வரவேற்றனர். காரித்தாஸ் பிறரன்பு அமைப்பின் இயக்குனர் அருள்பணி Zurab Kakachishvili அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இறைத்தந்தையின் இரக்கத்தை அதிகமாக உணர உதவுகிறது. திருத்தந்தையின் பணிகள், ஏழைகளுக்கான பணிகளுக்கு ஊக்கம் அளிக்கின்றது என்று தனது வரவேற்புரையில் பேசினார். திருத்தந்தையும், இம்மையத்தில் உரையாற்றி, அவர்களின் பணிகளை ஊக்குவித்தார்.

இச்சனிக்கிழமை, உள்ளூர் நேரம் மாலை 5.45 மணிக்கு இச்சந்திப்பை முடித்து, அங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, Miskheta  நகருக்குக் காரில் சென்றார் திருத்தந்தை. இது, ஜார்ஜியாவின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இதன் பல்வேறு கலாச்சார நினைவிடங்கள், யுனெஸ்கோவின் பாரம்பரிய வளங்கள் பட்டியலில் 1994ம் ஆண்டில் இணைக்கப்பட்டன. 2014ம் ஆண்டில், இந்நகரை, புனித நகரம் என, ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் சபை அறிவித்தது. இந்நகரிலுள்ள, ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைமைப் பேராலயமான Svetyskhoveliல் இச்சந்திப்பு நடந்தது. இப்பேராலயத்தின் பெயருக்கு(Sveti – Tskhoveli), வாழ்வு தரும் தூண் என்ற அர்த்தமாகும். இங்கு, ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 2ம் இலியா அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.  பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் உரையாற்றினார்.

இதுவே, இச்சனிக்கிழமையன்று நடந்த கடைசி நிகழ்வாகும். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அஜர்பைஜான் நாட்டிற்கு, இஞ்ஞாயிறன்று சென்று, அன்று இரவு உரோம் திரும்புவார் திருத்தந்தை. “ஆண்டவராகிய இயேசுவே, போரில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது, உம் சிலுவையின் நிழல் விழச்செய்யும். ஒப்புரவு, உரையாடல் மற்றும் மன்னிப்பின் பாதையை அவர்கள் கற்றுக்கொள்வார்களாக” என்று, இவ்வெள்ளி மாலையில் தனது டுவிட்டரில் செபித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். நாமும் திருத்தந்தையோடு சேர்ந்து, அவரின் கருத்துக்களுக்காகச் செபிப்போம். ஜார்ஜியா மற்றும் அஜர்பைஜானுக்கு திருத்தந்தை மேற்கொண்டுள்ள இந்த 16வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்திற்காகத் தொடர்ந்து செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.