2016-10-01 15:23:00

அர்ஜென்டீனா மக்களுக்கு திருத்தந்தை காணொளிச் செய்தி


அக்.01,2016. தனது தாயகமான அர்ஜென்டீனா மக்களுக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், இந்த ஆண்டோ அல்லது 2017ம் ஆண்டிலோ அர்ஜென்டீனாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள இயலாத நிலையைக் குறிப்பிட்டு, அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆசியாவுக்கும், ஆப்ரிக்காவுக்கும் ஏற்கனவே திருத்தூதுப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும், தான் இன்னும், அர்ஜென்டீனா கடவுச்சீட்டை வைத்தே பயணம் செய்வதாகவும், தனது மக்களுடன் நெருக்கமாய் இருப்பதாகவும் அதில் பேசியுள்ளார் திருத்தந்தை. அர்ஜென்டீனாவின் மிகப்பெரிய வளம் அந்நாட்டு மக்களே. எனவே, உதவி தேவைப்படும் மக்களுடன் உடன்நடக்குமாறு கேட்டுள்ள திருத்தந்தை, தங்கள் நாட்டைத் தங்கள் தோள்களில் சுமந்து, தங்களால் வழங்க இயன்ற சிறப்பானவற்றை நாட்டுக்கு வழங்குமாறும் கூறியுள்ளார். பள்ளி ஆசிரியர் போன்று, இந்த யூபிலி ஆண்டில், தன் நாட்டினருக்கு வீட்டுப் பாடங்களைக் கொடுப்பதாகவும், ஏழு, உடல் மற்றும் ஆன்மீகப் பணிகளை, ஒவ்வொரு நாளும் அல்லது ஒருநாள்விட்டு ஒருநாள் ஆற்றுமாறும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வாண்டின், அர்ஜென்டீனா தலத்திருஅவையின் இரு முக்கிய நிகழ்வுகள் பற்றியும் பேசியுள்ளார் திருத்தந்தை.

ஒன்று 18ம் நூற்றாண்டு கத்தோலிக்க பொதுநிலை விசுவாசி Mama Antula அவர்களுக்கு முத்திப்பேறு பட்டம், மற்றொன்று, அக்டோபரில், 19ம்  நூற்றாண்டு அருள்பணியாளர் Cura Brochero அவர்களுக்குப் புனிதர் பட்டம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.