2016-10-01 11:19:00

Tbilisi நகர் திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


அக்.01,2016. அன்பு சகோதர, சகோதரிகளே, பெண்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், இந்நாட்டின் பல உன்னதமான கருவூலங்களில் ஒன்று. இன்று நாம் கொண்டாடும் புனித தெரேசா, "ஆண்களைவிட, பெண்கள் மிக அதிக எண்ணிக்கையில், இறைவன் மீது அன்பு கொள்கின்றனர்" என்று கூறியுள்ளார். புனித நீனோ விதைத்த விசுவாசத்தை இந்நாட்டில் பாதுகாத்து, அடுத்தத் தலைமுறையினருக்கு வழங்க, பல நூற்றாண்டுகளாக, அன்னையரும், பாட்டிகளும் முன்வந்துள்ளனர். "தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்" (எசாயா 66:13) என்று இன்றைய முதல் வாசத்தில் நாம் கேட்டதன் அழகை, இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு தாயின் அன்போடு நம்மைத் தேற்றி, அரவணைக்கும் இறைவனைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இறைவனின் அன்பை உணர்ந்துகொள்ள, அவருக்கு நம் வாழ்வில் இடம்தர வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் வாசிக்கும் இறைவார்த்தை, அமைதியான செபம், ஆராதனை, ஒப்புரவு அருளடையாளம், திருப்பலி என்ற கதவுகளைத் திறந்தால், இறைவன் நம் வாழ்வில் இடம்பெற முடியும். நம் இதயக் கதவுகளைத் திறக்காமல் மூடி வைத்தால், அங்கு, இருள் சூழ்ந்து, துயரத்திலும், மனச் சோர்விலும் நாம் ஆழ்ந்துவிடுவோம்.

துயரங்களிலிருந்து நம்மை விடுவித்து, ஆறுதல் தருவது நம் திருஅவை, நம் ஆலயங்கள். மனச் சோர்வுற்று, இறைவன் தரும் ஆறுதலைத் தேடி வருவோரை, நம் ஆலயங்களில் நாம் வரவேற்கிறோமா? இதயத்தில் துயரத்தையும், புறக்கணிப்பையும் உணர்ந்தாலும், கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பிறர் வாழ்வில் நம்பிக்கையை, மன்னிப்பைக் கொணர அழைக்கப்பட்டுள்ளோம்.

இறைவனின் இரக்கத்தால் நாம் அழைப்பும், அருள்பொழிவும் பெறும்போது, நம் உள்ளத்தில் இருக்கும் துயரங்களும், பிரச்சனைகளும் நீங்குவது கிடையாது, மாறாக, துயரங்களை அமைதியுடன் தாங்கும் பக்குவத்தையும், மற்றவர்களை அன்பு செய்யும் சக்தியையும் வழங்குகிறது.

எனவே, அன்பு சகோதர, சகோதரிகளே, நம் பிரச்சனைகள், நமக்கு இழைக்கப்பட்ட அநீதி இவற்றில் நாம் புதைந்து போகாமல், இறைவனின் அழைப்பை ஏற்று, நம் மனக்கதவுகளைத் திறந்து, பரந்து விரிந்த நம்பிக்கையை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வோம்.

இறைவனின் இரக்கத்தைப் பெறுவதற்கு, ஓர் அடிப்படை நிபந்தனை உள்ளது. அதை இன்றைய இறைவாக்கு நமக்கு நினைவுறுத்துகிறது, அதாவது, சிறுபிள்ளைகளைப் போல் மாறுவதே (மத். 18:3-4) அந்த நிபந்தனை. "சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்" (மத். 18:4) என்று இயேசு நமக்கு நினைவுறுத்துகிறார்.

உயர்ந்த சிந்தனைகளின் வழியே அறியப்படுவதைவிட, நம்பிக்கை கொள்ளும் எளிய மனங்களின் வழியே அறியப்படுவதையே இறைவன் விரும்புகிறார். சிறு விடயங்கள் வழியே அரும்பெரும் செயல்கள் நிகழ்வதை நாம் நற்செய்தியில் அடிக்கடி பார்க்கிறோம். ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் (மத். 14: 15-20), ஒரு கடுகு விதை (மாற். 4: 30-32), ஏழைக் கைம்பெண்ணின் இரு காசுகள் (லூக். 21: 1-4) என்ற சிறு விடயங்கள் வழியே, அற்புதங்கள் நிகழ்வதைக் காண்கிறோம்.

இன்று நாம் கொண்டாடும் குழந்தை இயேசுவின் புனித தெரேசா, இந்த எளிய வழியை நமக்குச் சொல்லித் தருகிறார். "இயேசு நம்மிடம் பெரும் செயல்களைக் கேட்பதில்லை, எளிமையாகச் சரண் அடைவதையும், நன்றி கூறுவதையும் கேட்கிறார்" என்று இப்புனிதர் கூறியுள்ளார்.

எளிமையான உள்ளம் என்ற அருளை நாம் இன்று இறைவனிடம் இணைந்து வேண்டுவோம். இறைவனின் இரக்கத்தில் முழுமையான நம்பிக்கை கொண்டு, அமைதியுடன் வாழும் வரத்தை வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.